சிகப்பு விளக்கு
அதோ சிகப்பு விளக்கு
எரிகிறது
சிறிது சிறிதாய் தெரிகிறது
வெளுத்த இதழ்களும
வெம்மிய உடல்களும்
குழித்த விழிகளோடு
குமுறிய மொழிகள்
ஒ! கோவலன்களே
அவளும் கண்ணகிப் பரம்பரையின்
கடைசிப் பிறவிதான்
அவளைப் பெற்றுப்போட்ட
பெரும் பாவிகள் மலரை
கசக்கி எறிய விரும்பாமல்
மாலையாக்கி சண்டாளப் பேய்களின்
சந்நிதியில் சுட்டிய போது
அவள் வயிற்றுப் பசியோடு
அவன் உடல் பசி
போட்டியிட்ட போது
காமக் கழுகின் கோர
நகங்கள் அவள் கண்னிமையை
பிராண்டிய போது
சமுதாயம் அவளை
சேற்றிலே தள்ளி
சந்தனம் பூசிய போது ?
ஏங்கிய நாய்களுக்கு
அவள் எச்சில் இலையானால்
வாங்கிய பணத்துக்கோ
அவள் வதங்கிச் சருகனால்!
அந்தச் சிகப்பு விளக்கிற்கு
எண்ணெய் உற்றி திரியை
ஏற்றி தீயை வைத்தவர்கள்
பண்பாட்டு அக்கினியில்
பரிசுத்தமானர்கள்
பாஞ்சாலி கதை நடத்தி
பத்தினிக்கு சிலை எழுப்ப
பணம் திரட்டுகிறார்கள்
அதோ இன்னும் பிரகாசமாய்
எரிகிறது சிகப்பு விளக்கு
விலை போகிறது
மானுடம் .....
-மழைக்காதலன்