இதயம் வெடித்தது...!

பெண்ணே என்னடி ஆச்சி உனக்கு...?
எதிரெதிர் வீட்டில் வசித்த போதும்
உன்னிடம் பேச மனம் துடிக்கவில்லை
உன்னை பார்க்கும் நேரத்தில்
சினேகமாய் சிறு புன்னகை செய்தேன்
நான் பார்க்க வேண்டும் என்றே
சண்ணல் கதவுகளை
திறந்து வைத்து
படிப்பது போல் பாவனை செய்தாய்
பள்ளிக்கூடம் செல்கையில்
என் நிழல் பிடித்து நடந்தாய்
உலகிலேயே உனக்கு மட்டும் தான்
குழந்தைகள் பிடிக்கும் என்பதுபோல்
இரவல் குழந்தையை கொஞ்சி மகிழ்ந்தாய்
நான் பார்க்கும் நேரத்தில்
முத்த மழை பொழிந்தாய்
உன் வீட்டு பலகாரங்களை
மடியில் கட்டிக்கொண்டு
என் வீட்டுக்குள் நுழைந்து உறவாடினாய்
நான் பள்ளி செல்லா நாட்களில்
உனக்கு மட்டும் எப்படிதான்
காய்ச்சல் வந்ததோ...?
தேர்வு என்னை தேற்றியது
தோற்ற உன்னை தேற்ற
மனதில் ஏதும் தோன்றவில்லை
நாட்கள் நகர்ந்தன
வருடங்கள் உருண்டோடின
நானும் ஓர் அதிகாரியாம்
அலுவலகத்தில் சொல்கிறார்கள்
இலக்கை அடைந்த மகிழ்ச்சியில்
இமைகளை மூடி யோசித்தால்
உன் வீட்டு சண்ணல்
கதவுதான் திறக்கிறது
என் விழிகள் ஏனோ வியர்க்கிறது
சில ஆண்டுகள் தொடர்பில்லாத ஊருக்கு
மீண்டும் வந்தேன்,
பண்டிகை கொண்டாட...!
தீபாவளி பட்டாசு வெடிக்கையில்
காயம் என்னவோ எனக்குதான்
ஆனால் துடித்தது எல்லாம் நீதான்
அன்று என் விரலில்
வடிந்த செந்நீரை விட
உன் கண்ணில் வடிந்த
கண்ணீர்தான் என்னை
கலங்கச் செய்தது...!
எனக்குள் மறைந்திருந்த நரகாசூரனை
வதம் செய்தது உன் கண்ணீர்!
உன்னை கட்டியணைத்து
காதலை சொல்லவும்
உன் விழிகள் பேசிய வார்த்தைகளை
புரிந்து கொள்ளாத என்னை
ஏற்றுக்கொள் என்று
உன் கரம்பற்றிக் கண்ணீர் விடவும்
மனம் துடியாய் துடித்தது...!
வலியை பொறுத்துக்கொண்டு
உன்னை நோக்கி வருகையில்
பச்சிளங் குழந்தை அழும் சத்தம் கேட்டு
உன் வீட்டுக்குள் பாய்ந்து ஓடினாய்...
என் இதயத்தில் குண்டு வெடித்தது...!!!

எழுதியவர் : கதிர்மாயா (24-Apr-12, 1:37 am)
பார்வை : 276

மேலே