நரைமுடி
காலையில் தலைவாறும்
தருணம் ஏதோ ஒரு சிறு தடுமாற்றம்.
விளக்கை எரியவிட்டு
கண்களை விரித்துப் பார்த்தேன்.
லேசான படபடப்பு.
முகத்திலும் முளைத்தது
வியர்வைத் துளிகள்.
வியர்வையை துடைத்தெறிந்து,
தலை முடிக்குள் விரல்விட்டு,
சிறிது விலக்கி, கண்ணாடியில் பார்த்தால்,
ஆங்காங்கே நரைமுடிகள்.
பதட்டத்திற்கு அர்த்தம் புரிந்து
ஆராய ஆரம்பித்தேன்.
நரைமுடி ஒன்றோ ரெண்டோ அல்ல,
மொத்தமாய் நூறைத் தாண்டும் போல.
நரைமுடிகளே வயதாவதை ஊருக்கு
விளம்பரப் படுத்தும், உச்ச நட்சத்திரங்கள்.
இருந்தாலும் இவைகளை என்
அனுபவங்களின் அட்ச்சானியாய் பார்க்கிறேன்.
நெற்றியில் படரும் நரைமுடிகளை,
என் கல்லூரி அனுபவங்களாய் உணர்கிறேன்.
உயர் கல்வி கண்டறியாத குடும்பத்தின்
முதல் மாணவன் நான்.
என் சகவயது சொந்தங்கள்
படிப்பில் ஆர்வமின்றி,
பனியன் கம்பெனியில் பாடுபட,
நான் மட்டும் படித்து, கற்றுத் தேர்ந்து,
உயர் கல்வி அடைந்தது சாதனையன்றோ?
தலை நடுவில் வீற்றிருந்த
ஒரு கொத்து நரைமுடிகள்,
பலரோடு போட்டி போட்டு
நான் பெற்ற முதல் வேலையை
பறைசாற்றுகிறதோ?
காதோடு கரை புரளும் நரைமுடிகளோ,
காத்திருந்து காதலித்து,
கவி பல பாடி,
கண்ணியத்தை நிரூபித்து,
பாசத்தை புரியவைத்து,
நேசம்காட்டி நெகிழவைத்து,
சண்டை சச்சரவு ஏதுமின்றி,
கச்சிதமாய் காதலியின் கரம்பிடித்த,
கணத்தை காட்சிபடுத்துகிறதோ?
மாடாக உழைக்காமல்,
ஓடாக தேயாமல்,
எனகென்ற ஒரு வீட்டை,
வங்கி துணைகொண்டு
வாங்கி மகிழ்ந்ததை,
ஒரு சில சிறு நரைமுடிகள்
வாஞ்சையோடு விளங்க
வைக்கின்றனவோ?
வெளிநாட்டு வேலைக்காக
மேற்க்கொண்ட முதல் விமானப் பயணம்.
நான் ஆகாயத்தில் பறக்கும் போது,
தாயும் தந்தையும் நிலத்தில்
நின்று கொண்டே பரந்த
சேதி கேட்டு, கண்ணீரோடு
கர்வமும் எட்டிப் பார்த்த தருணத்தை,
துண்டு நரைமுடிகள்
தம்பட்டம் அடிக்கின்றனவோ?
பெண் குழந்தை பேறு பெற,
பேராசை பட்டபோதும்.
நிராசையாகாமல் நேர்த்தியாய்
வந்து பிறந்தவள், என் குட்டி தேவதை.
புண்ணியம் பெற்றவன் நீ
என்று புரியவைக்கவோ,
பல பொல்லாத நரைமுடிகள்
பல்லைக் காட்டியது என் பின்னந்தலையில்?
எதிரிகளே சூழ்ந்திருக்கும் இந்த கலியுகத்தில்.
அறியாமலே நான் சேர்த்த நண்பர் கூட்டம்.
யாருக்கு கிடைக்கும்?
நல்ல நண்பர்களே நம்
வாழ்வாதாரங்கள் என்று அரிய
வைக்கவோ வீற்றிருந்தன
சில நரைமுடிகள்?
இப்படி நம் சாதனைகளை
தினந்தோறும் சிந்துபாட,
சிரம் தாழ்த்தி அமர்ந்திருக்கும்
நரைமுடிகளை வெறும்
புற அழகிற்க்காக மை
கொண்டு கொல்ல வேண்டுமா?