இதோ நல்ல நேரம் ...!
மருத்துவமனை முன்
காத்திருந்தது ஓர் கூட்டம் ...
கர்பினியும் காத்திருந்தாள்
டாக்டரும் காத்திருந்தார்
ஜனனமாகப்போகும்
குழந்தையும் காத்திருந்தது ...!
யாருக்காக ... ?
அவரவர் செவிகளில்
அலறித்துடித்தது அலைபேசிகள் ...
உறவுகளின் நச்சரிப்பால்
பஞ்சாங்கத்துக்குள்
தலையை பிய்த்துக்கொண்டனர்
ஜோதிடர்கள் ....
அறுவை சிகிச்சை
ஆனாலும் பரவாயில்லை
நல்லநேரம் பார்த்தே
கத்தியை வையுங்களேன
புலம்பித்தவித்தது தாய்க்குலம் ...
ஆர்ப்பாட்டம்
அமளி துமிளிக்கு மத்தியில்
எமகண்டம் ராகுகாலம்
தவிர்த்து
பூவுலகில் புதிய ஜனனம் ...!
கண்களைத்திறந்தவுடன்
கத்தியைக்கண்டு
அலறியது குழந்தை ...!
அடேங்கப்பா ...
என்னைச்சுற்றி இத்தனை முட்டாள்களா ...?
அழுவதா சிரிப்பதாவென
சிந்திப்பதற்குள்
காந்தி நோட்டுக்களை
கைகளில் திணித்து
அதற்குள் கடனாளியாக்கிவிட்டார்கள் ...!
இது பிறப்பல்ல எடுப்பு ...!
தாயின் வயிற்றில்
" கரு " உருவாகும்
நாளே நல்ல நாள் ...!
இதை
உணராத டாக்டரும்
அவசர அவசரமாக ஓடினார்
ஜோதிடரை நோக்கி
தன்
நிறைமாத கர்பினியை கூட்டிக்கொண்டு ...!
கக்கூசுக்கு கூட
நிம்மதியாக போகமுடியாமல்
மூத்திரத்தை அடக்கி
தவித்துக்கொண்டிருந்த ஜோதிடரைச்சுற்றி
கூட்டம் கூட்டம்
கூட்டமோ கூட்டம் ...!
ஜோதிடரைக்கான
ஓடிவந்த கர்பினியும்
கல்தடுக்கி கீழே விழுந்து
அங்கேயே சுகப்பிரசவம் கண்டாள்
குழந்தையின்
அலறல் கேட்டு
ராகுகாலம் இன்னுமிருக்குமென
கூச்சலிட்டு ஓடிவந்த
ஜோதிடரும்
அதே கல்தடுக்கி
கீழே விழுந்து காலுடைந்தார் ...!
டாக்டரின் குழந்தை சிரித்தது
அப்பாடா ... அப்பா ...
கத்தியைக்காட்டி மிரட்டவில்லையென ...!
காலுடைந்த ஜோதிடரும்
மருத்துவ மனைக்கு
பயணமானார்
ஜோதிடருக்கு
நேரம் சரியில்லையென
புலம்பி கலைந்தது கூட்டம் ...!