ஜன்னல்வெளிக் கல்வி....
பல நாட்கள் படுத்த
படுக்கையில் சஞ்சாரம்.
போன மாதம் இன்னும்
மோசமாகி ஆஸ்பத்ரியில்
அனுமதிக்கப் பட்டேன்.
எனக்கு வயது 76 .
உலகில் உள்ள அனைத்து வியாதிகளும்
என்னை ஏதேனும் ஒரு தருணத்தில்
தரிசித்திரிக்கும்.
நடக்கவோ, லேசாக எழுந்து
அமரவோ, சாத்தியும் இல்லை.
காதும், கண்ணும் எப்போதாவது
வேலை செய்யும்.
இந்த ஒரு மாத காலமும்
ஆஸ்பத்திரியின் பல அறைகளில்
வாசம் செய்த அனுபவமும் பெற்றேன்.
ஏதோ கடவுள் புண்ணியத்தில்
இதே அறையில் சுமார் ஒரு
வாரம் தங்கிக் கொண்டிருக்கிறேன்.
இது இருவர் தங்கும் அறை.
அறையில் ஒரு ஜன்னலும் உண்டு.
மாலை வேலையில் நர்ஸ் கொசுவுக்கு
பயந்து அடைத்துவிடுவாள்.
என் படுகையில் இருந்து
ஓரப் பார்வையில் ஜன்னலை
பார்க்க மட்டுமே முடியும்.
இன்னும் எத்தனை நாளோ
இந்த பூலோகத்தில் என்று
நினைத்துக் கொண்டிருந்த பொழுது,
கதவை தட்டியபடி நர்ஸ்,
ஒரு சக நோயாளியை சக்கர
நாற்காலியில் தள்ளி வந்தாள்.
என் அறைக்கு இன்னொருவர்.
சிறிது சந்தோசம் எனக்கு.
அவரும் என் வயதுக்காரர்.
என்னை விட கொஞ்சம்
தெம்ப்பும், உற்சாகமும் கொண்டவர்.
அவருக்கு மட்டும் நாளைக்கு
ஒரு மணி நேரம் கட்டிலில்
அமர்திருக்க வேண்டும்,
என்று மருத்துவரின் கட்டளை.
பேச ஆரம்பித்தோம்.
பேசிக்கொண்டே இருந்தோம்.
குடும்பம் பற்றி, அரசியல் பற்றி,
மருமகள் கொடுமை பற்றி,
மகன்களின் இயலாமை பற்றி,
நோய் பற்றி, பேத்திகள் கொண்டுள்ள பாசம் பற்றி,
இப்படி எத்தனை எத்தனையோ.
அவர் பேச்சில் ஒரு அக்கரை
தெரிந்தது, என்னை சிரிக்க
வைப்பதிலேயே குறியாய் இருந்தார்.
மிகவும் நல்ல குணம் படைத்தவர்.
இன்று நர்ஸ் துணையோடு
நண்பர் எழுந்து அமர்தார்.
அமர்ந்தவரின் முகத்தில்
அப்படியொரு பூரிப்பு.
ஏன் என்று விசாரித்தால்,
ஜன்னல் செய்த ஜாலம் என்றார்.
உற்று பார்க்க ஆரம்பித்தவர்,
வெளியே தெரியும் சேதிகளை
ஒன்றன் பின் ஒன்றாக விவரித்தார்.
ஏழு வயதே நிரம்பியுள்ள
பள்ளி குழந்தைகள், பள்ளி
செல்லும் அழகை சொன்னார்.
கொஞ்சம் எட்டிப் பார்த்து
வண்ண பலூன் வாங்கிச்
செல்லும் சிருமிபற்றிச் சொன்னார்.
அவர் சொல்லும் அழகில்
என் மனது கொஞ்சம் இளமையாவதை
உணர்தேன்.
இதேபோல் தினமும் தெருவில்
நடக்கும் நிகழ்வுகளை என்
மனதில் பதியவைத்து மகிழ்வார்.
ஒரு முறை தெருவுக்கு
அப்பால் உள்ள பூங்காவில்
நடக்கும் இளம் காதலரின்
ஊடல்களை விளக்கினார்.
இன்னொரு தருணம்
தெருவில் செல்லும்
பெருமாள் உற்சவம் பற்றி
ஓதினார்.
இதை கேட்கவே இவ்வளவு
ஆனந்தமும் உற்சாகமும்
தருகிறதே, இன்னும் இதை நேரில்
கண்டால் எப்படி இருக்கும்
என்று தோன்றிற்று.
அடுத்த நாள் இதே போல்
விண்ணில் சிறகடித்து
பறக்கும் பறவைகள் பற்றி
சொன்னார். என் மனது அதை
வாங்கிக் கொள்ள மறுத்தது.
நண்பர் மட்டும் அனுபவிக்கிறாறே
என்ற கோபமும் மட்டுமே மிஞ்சியது.
எப்படி அவர் படுக்கையை
நாம் அபகரிப்பது என்று
கணக்கு போட்டேன்.
ஆனால் ஒன்றும் எடுபடவில்லை.
தூக்கம் வராமல் சதா
ஜன்னல் பற்றியே நினைத்துக்
கொண்டிருந்தபொழுது,
அதிர்ஷ்டகார நண்பர்,
இரும ஆரம்பித்தார்,
இரும்மிக் கொண்டே இருந்தார்,
கட்டிலில் அருகே இருக்கும்
பட்டனை அழுத்தி நர்சை
வரவழைக்க தேடுகிறார்,
அகப்படவில்லை.
அவர்மட்டும் ஜன்னல் சுகத்தை
அனுபவிதவர்தானே, இதையும்
சேர்த்து அனுபவிக்கட்டும் என்று
விட்டு விட்டேன்.
சிறிது நேரம் கழித்து இருமல்
அடங்கியது.
காலையில் பார்த்த நர்ஸ்
நண்பர் இறந்து விட்ட சேதியை
என்னிடமும் சொன்னார்.
லேசான வருத்தம், இருந்தும்
கட்டிலை அபகரிக்க நல்ல வழியாய்
தோன்றிற்று.
என் விருபத்தை நர்சிடம் சொன்னேன்.
அவரும் இடமாற்றித் தந்தார்.
சந்தோசத்தோடு அவர் கட்டிலில்
படுத்தேன்.
சிறிது நேரம் கழித்து
நர்சை அழைத்து என்னை தூக்கி
அமரவைக்குமாறு கேட்டான்.
கஷ்டப் பட்டு அமர்ந்து,
ஆசையாய் ஜன்னலைப் பார்த்தேன்.
ஜன்னலுக்கு அப்பால்
வெறும் வெள்ளை சுவரே
காட்சியளித்தது........