உறவெனும் நந்தவனம்!

இது-
உறவெனும் நந்தவனமல்ல
நந்தவனத்தில் ஒரு உறவு!

இது-
உண்மை கதையின் விதை
கதையின் விதையே கவிதை!

குளத்து மீன் தெரியும்
மீன் குளம் தெரியுமா?
அவள் மீன் கண்கள் குளமானது

ஐயிரண்டு வருடங்கள்
ஆன பின்பும்
ஐயிரண்டு மாதங்கள்
சுமக்க ஒரு குழந்தையில்லை

ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி
சோறு தண்ணி உண்டு நாளாகி
அம்மனுக்கும் அல்லாவுக்கும் விரதமிருந்து
பல சொட்டு ரத்தத்தை வற்ற விட்டும்
காது கொடுத்து கடவுளும் கேட்கவில்லை
மாதவளின் அழுகையும் நிற்கவில்லை

உண்டாக வேண்டுமென்று
உண்டு வந்த மாத்திரைகள்
குண்டாக்கி வைத்ததன்றி
வேறெதுவும் செய்யவில்லை

நவீன மருத்துவம்
நாட்கணக்கில் இழுத்தது
பணமும் கரைந்தது;
மனமும் குலைந்தது

அத்தனையும் விட்டுவிட்டு
அடுத்தென்ன செய்வதென்று
அடுக்களையில் யோசித்தால்
ஆயாசமே மிஞ்சியது

"தத்தெடுப்போம் முத்துப்பிள்ளையை!"
தன கரம் பிடித்தவன்
தரத்துடன் கூறினான்

இவளும்
"உறவினர் பிள்ளையை
ஊட்டி வளர்க்க"
ஒப்புக் கொண்டாள்

"உன் ஆசை நிறைவேற
ஊரென்ன உறவென்ன...
உன் உறவில் தத்தெடுத்தால்
என் ரத்தம் மாறுபடும்
என்னுரவில் தத்தெடுத்தால்
உன் ரத்தம் மாறுபடும்
பொதுவாக தத்தெடுப்போம்
அழகாக வளர்த்தெடுப்போம்"

-என்ற

கொண்டவனின் கூற்றினிலே
குறையொன்றும் காணவில்லை
பெண்ணவளும் யோசித்தாள்
பிறை நிலவாய் சம்மதித்தாள்

நந்தவனம் குழந்தைகள் இல்லம்
அது, குழந்தைகளின் நந்தவனம்

தொட்டிலிலும் கட்டிலிலும்
கள்ளமில்லா வெள்ளைச் சிரிப்பில்
கடவுளின் அவதாரங்கள்!

அங்கே ஒரு காட்சி-

பக்கத்து வீட்டு
பக்குவமான தம்பதிகள்
தத்தெடுக்கும் எண்ணத்துடன்
முத்துப் பிள்ளைகளை
முத்த மழையில் நனைத்துக் கொண்டிருந்தனர்

அவர்களை
அடையாளம் கண்டு கொண்ட
அவளுக்கு
ஆச்சர்யம் தாங்கவில்லை

கேள்விக்குறியாய்
புருவங்கள் வளைந்தன!

குறிப்பால் உணர்ந்த தம்பதிகள்
குறுஞ்செய்தியாய் சொன்னார்கள்:

"ஒன்று பெற்றால் ஒளிமயம்...
ஏற்கனவே பெற்று விட்டோம்
மற்றொன்றை தத்தெடுத்தால்
அருள்மயம்...
தத்தெடுக்க வந்து விட்டோம்!"

புத்தம் புதுப் பழமொழி
அவர்கள் இதழின் மொழி

சின்ன வார்த்தைகள் தான்
பெரிய மாற்றத்தின் ஆரம்பம்!
மாற்றம் அவள் மனதுக்குள்!

"அவர்கள்
பெற்றெடுத்து தத்தெடுக்கிறார்கள்
நாம் தத்தெடுத்து,
கடவுள் அருளால்,
பிறகு பெற்றெடுப்போம்"
தீர்மானித்தது அவள் மனம்

பிறைநிலா பவுர்ணமி ஆனது போல்
அரைமனது முழுமனதானது

இதம் தரும் தாய்மைக்கு
மதமில்லை ஜாதியில்லை
நிறமில்லை பேதமில்லை
அட... இனமுமில்லை!

இது-
உறவெனும் நந்தவனமல்ல
நந்தவனத்தில் ஒரு உறவு!

எழுதியவர் : ஏ.ஆர்.முருகேசன் (5-May-12, 5:29 pm)
பார்வை : 235

மேலே