வாழ்க்கை அழகானது (தற்கொலை எதிரான ஒரு சிறிய முயற்சி)

வாழ்வது வாசமில்லா மலராய்
வீழ்வது மட்டுமே வசம் கொண்ட முடிவாய்
இறுதிப்பயணமே அருதியென
உறுதி கொண்ட மானிடா..

வாழ்க்கை அழகானது!

வெட்டி எறியப்படும் குட்டிப்புல்
நுனியது தாங்கும் பனித்துளி
இனிமை - அதை ரசித்தாயா?

வாழ்க்கை அழகானது !

பட்டுப்பூவின் மொட்டுத்தேடி
சிட்டாயப்பறக்கும் பட்டாம் பூச்சி
தொட்டுப்பார்க்க எட்டிப்பாக்கும்
மட்டில்லா ஆசை கொண்டாயா?


வாழ்க்கை அழகானது !

வாரிப்பூசிய வண்ணம் கொண்ட
மாறி தந்த மலர்ச்சரமாம் வானவில்
வாடிப்போகும் முன்னம் - அதை
ஓடிபிடிக்கும் குழந்தை எண்ணம்
குதூகலிக்கும் குணம் கொண்டாயா?


வாழ்க்கை அழகானது !

வெண்முகில் தன குழலாய் கொண்ட
வானப்பெண்ணும் சமயத்திலே
கருஞ்சாயம் பூசிய கூந்தல் மேகம்
கனிவாக பூமிக்குத் தூவும்
பூமழை - அதில் புத்துணர்ச்சி பெற
புவி மீதினில் நடந்தாயா?


வாழ்க்கை அழகானது !

தொட்டில் தொடங்கி வழி நெடுகே - சவ
கட்டில் காணும் சாந்தி வரை
உடலெங்கும் உபயோகம் - அதை
உபாயமாக அள்ளித்தரும்
மரங்களின் நிழல் - அதில்
மன அமைதி கொண்டாயா?


வாழ்க்கை அழகானது !

சொல்லில் உதிர்க்கவண்ணா
சோகங்கள் பல இருந்தும்
மெல்லிசையால் நமை ஈர்க்கும்
புள்ளினங்களில் லயித்தாயா?


வாழ்க்கை அழகானது !

சிதறாமல் தன முயற்சி கொண்டு
பிறழாமல் பின்னிய வலை
சிலந்தி எனும் தன்னம்பிக்கை தரும்
சித்தாந்தம் என அறிவாயா?


வாழ்க்கை அழகானது !

உயரம் தொடும் உத்வேகம்
உறுதியால் குருதி கலக்க
எட்டு வைத்து ஏறினால் மட்டும்
எட்ட முடியும் எவரெஸ்ட் சிகரம்.

சறுக்கலும் வழுக்கலும்
சரியாய் கலந்து கிடக்கும்
சாலை அதில் நடை பழகிட
சமதள பளிங்குப்பாதை
சாமானியம் ஆகும்.

மூதறிவு முதிர்ச்சியினை
முழுவதுமாய் உணரும் முன்பே
சாதாரண சங்கடத்திற்கும்
சாவுதனை சங்கமிக்க
சலனம் கொண்ட மனது - ஏனோ
சறுக்கலாகி போனதேன்?


முட்டிய இடர்ப்பாடுதனை
எட்டி உதைக்க முற்படு !
பாழாக்கும் சூழ்நிலையை
மேலாக்கி நிமிர்த்து !

சுழலும் வரை பூமி
சுடும் வரை நெருப்பு
போராடும் வரை மனிதன் - எனும்
ஆக்கம் கொண்ட சிந்தனை
ஊக்கம் கொள்ள உறுதி கொள் !

சமயம் நோக்கி காத்திராமல்
அபயம் தேடி அலைந்திராமல்
இதயம் நிரம்பிய வெறியின் உபயம்
இமயம் உந்தன் காலடி அடக்கம்.

எழுதியவர் : "கமுதிக்கவி" சௌ.முத்துராஜ (11-May-12, 9:34 pm)
பார்வை : 737

மேலே