கவிதைச்சோலை
வளம் கொழித்த சோலை
அழகிய இளவேனிற் மாலை,
நகரவாசியான என் விழிகளுக்கு
இன்றிந்த சோலையில் விருந்து.
மாசுக்களுக்கு அஞ்சியஞ்சி
சுருங்கிய என்விழிகள்
இவளின் ஓரவிழி
அழகுகண்டு ஆச்சரியத்தில்
விரிந்து நோக்கியது....
கருங்குருவிகள் இரண்டும்
கொஞ்சிக் குழவ
கானக் குயில்கள்
கீதம் இசைக்க
அருவிகளின் ஆரவாரம்
பக்கவாத்தியம் முழங்க,
என் சிவந்த பாதங்கள்
அங்கு அடியெடுத்து வைத்தன.
அவளின் அழகை வர்ணனை செய்ய
என் சிந்தையில் ஆயிரமாயிரம்
வார்த்தைகள் உதயமாயின...
தமிழின் எழில் குறையாது
சிறந்த வார்த்தைகளை
எடுத்து அதை கவிதையாய்
தொடுத்து முடித்தேன்.
வாசிக்க வாயெடுக்கையில்
என்னை சில கைகள்
இழுத்தன சில வார்த்தைகளோடு
பள்ளிக்கு நேரமாகிவிட்டது
ம்.. ம் ...எழுந்திரு.
விழிகள் கனவைப் பிரிய
மனமில்லாது திறக்க
பழைய இயந்திரத்தனமான
காட்சிகள் என் கண்முன்...
முதன் முதலாய் எழுதிய கவிதை
இன்று காற்றில் கலைந்துவிட்டதே .....
கவிதை வாசிகளே-என்
கனவுக் கவிதையை
வாசிக்க உதவுங்களேன்
மனம் அங்கலாய்க்கிறது....