நம்பிக்கை

எப்படி முடியும் ? என்பது எதற்கு ?
என்னால் முடியும்..! என்பதே இலக்கு...!
எதிர்மறை எண்ணங்கள் ஏற்றத்தை தடுக்கும்
எண்ணுவோம் நல்லதை - எல்லாம் முடியும்..!
சாவதற்கு இருப்பது ஒரே ஒரு நாள்
சாதிப்பதற்கு இருப்பது நமது வாழ்நாள்
கவலையை புதைத்து கடமையை நினைத்து
கருத்தினை செலுத்துவோம் - எல்லாம் முடியும்..!
செதுக்க ஜொலிப்பது கருப்பு வைரங்கள் - தீ
அடிக்க வளைவது இரும்புக் கம்பிகள்
தடுக்க வருகின்ற தடைகள் ஏணிகள்
தன்னம்பிக்கை கொள்வோம்-எல்லாம் முடியும்..!
சிறகுகள் உதிர்ந்த கழுகுஅதன் நம்பிக்கை
சீக்கிரமே புது ரெக்கை வரவைக்கும்
சிறிதாய் வானமாக சிறகடித்து பறக்கும்
சிந்தையில் வைப்போம் - எல்லாம் முடியும்
மூச்சை அடக்கினால் முத்துக் குளிக்கலாம்
முயற்சி செய்வதால் ஜெயித்து முடிக்கலாம்
முடியாது என்பதை மூட்டை கட்டலாம்
முன்னேற நினைப்போம் - எல்லாம் முடியும்...!
மறையும் சூரியன் மரித்தா போகுது ?
மறுநாள் விடியவே மகிழ்வுடன் வருகுது !
மனதில் கவலைகள் கலங்கவா வைக்குது ?
மகிழ்ந்து சிரியுங்கள் - எல்லாம் முடியும் ..!
வீழ்வதை நினைத்தால் வாழ்வது கசப்பு
தாழ்வதை நினைத்தால் தரணியே கொதிப்பு
வெல்வதை நினைப்போம் வெற்றியைப் பிடிப்போம்
வேதனை தகர்ப்போம் - எல்லாம் முடியும்....!
நத்தைகள் நினைத்தால் நகர்த்தும் இமயத்தை
நாமும் நினைத்தால் நிறுத்தலாம் உதயத்தை
போகட்டும் விடுங்கள் புலரட்டும் பொழுதுகள்
பொங்கியே எழுங்கள் - எல்லாம் முடியும் ...!
புதைமணல் துயரங்கள் உயிர்தனை இழுக்கும்
அதை எண்ணி வருந்திடின் ஆயுளே குறையும்
நம்பிக்கை வைத்தே நலமுடன் முயலுவோம்
நலமாகும் துன்பங்கள் - எல்லாம் முடியும்....!
சுனாமிக் கடலில் சுழட்டிய அலையில்
சுண்டெலி மாட்டி சுக்குநூராய் போகலே…!
சின்னங்சிறு கட்டையை சிக்கெனப் பிடித்து
சிறப்பாய் பிழைத்தது - எல்லாம் முடியும்....!
பிழைப்பேன் என்றே பெரிதாய் நம்பியது
பிழைத்தே ஜெயித்தது - இது சிறு கதை.....!
சின்னங்க்சிறு கட்டையே நம் நெஞ்சில் நம்பிக்கை
சிக்கெனப் பிடிப்போம் - எல்லாம் முடியும்...!
நம்பிக்கை வைத்தால் - எல்லாம் முடியும்.....!
முடியும் என நினைத்தால் - நம்பிக்கை வரும்...!
எல்லாம் முடியும்.....! நம்பிக்கை வைத்தால்
நம்பிக்கை வரும்...! முடியும் என நினைத்தால்...!