மண் குதிரை

பெரியன்ன கருப்பசாமி கோவில் என்றாலே எனக்கு நினைவுக்கு வருவது கோவிலின் பின்புறம் உள்ள மந்தையில் இருக்கும் மண்குதிரை தான். கோவிலுக்கும் எனக்குமான உறவு சிறு வயதில் எனக்கு நினைவு தெரிந்த நாட்களில் இருந்தே தொடர்ந்து வருகிறது. கோவிலும் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளும் பல மாறுதலுக்கு உட்பட்டாலும் மண்குதிரை மட்டும் தான் நான் சிறு வயதில் பார்த்ததை போலவே இப்போதும் கம்பீரமாய் தோற்றமளித்து கொண்டிருக்கிறது. ஊரில் சிறுவர்கள் பொழுது போக்குவதற்கான ஒரு இடம் என்றால் கருப்பசாமி கோவில் மந்தை தான் என்று கூற வேண்டும்.

எறி பந்து, கபடி, கிட்டி(கில்லி), கோ கோ, குண்டு உருட்டல், பம்பரம் சுத்துறது என்று பல விதமான விளையாட்டுகளும் அரங்கேறும். ஜாதி பாகுபாடின்றி ஊரின் அத்தனை சிறுவர்களும் ஒன்றாய் கூடி விளையாடும் இடம் என்றால் அது மந்தை மைதானம் தான். வயதிற்கு ஏற்றார் போல இரண்டு, மூன்று குழுக்களாய் விளையாடுவோம்.

சுமார் 17,18 வருடங்களுக்கு முன் ஒரு நாள் அன்று விடுமுறை என்பதால் காலையிலேயே மந்தையை அடைந்து இருந்தேன். அன்றும் மந்தை மிகவும் கலகலப்பாகவே இருந்தது. காலையிலேயே கபடி போட்டி தொடங்கி இருந்தது. பொதுவாக கபடி போட்டியில் சிறுவர்களை சேர்த்துக் கொள்ள மாட்டார்கள் என்பதால் நானும், லோகநாதனும் கபடி போட்டியினை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். எனது வேடிக்கை அப்படியே மண் குதிரையின் பக்கம் திரும்பியது.

ஊரில் கோவிலின் மீதும் மண் குதிரையின் மீதும் மக்களுக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. அமாவாசை தினத்தில் கருப்பசாமி இந்த குதிரையில் ஊரையே வலம் வருவார் என்பதும் தவறு செய்தவர்களுக்கு தண்டனை வழங்குவார் என்பது தான் அந்த நம்பிக்கை. பல வருடங்களாகவே இன்றளவிலும் இந்த நம்பிக்கை ஊரில் இருந்து வருகிறது.

அப்போது லோகநாதனின் அண்ணன் யோகநாதனும் மந்தைக்குள் நுழைந்தான். எங்களை விட இரு வயதே மூத்தவன் என்பதால் அவனுக்கும் கபடி போட்டியில் இடம் மறுக்கப்பட்டது. இப்போது மூன்று பேர் சும்மா இருக்கிறோம் என்பதால் ஒரு யோசனை தோன்றியது. மூவரும் சேர்ந்து ஒளிந்து பிடித்து விளையாடலாம் என்று முடிவெடுத்தோம்.

அதன்படி லோகநாதன் சென்று மந்தையில் இருக்கும் கலையரங்க தூணினை நோக்கி ஒன்று, இரண்டு என என்ன ஆரம்பித்தான். யோகநாதன் கோவிலுக்குள் ஓடி ஒளிந்து விட்டான். சிறிது யோசித்தவனாய் நான் மண் குதிரையின் புற பக்கம் சென்று ஒளிந்து கொண்டேன்.

லோகநாதன் தன் தேடல் படலத்தை ஆரம்பித்தான். கோவிலின் ஒவ்வொரு பகுதியாக தேடினான். முதலில் யோகநாதனை கண்டுவிட்டான். எப்படியாவது அவனிடம் மாட்டக் கூடாது என்ற எண்ணத்தில் மண் குதிரையின் பின் பக்கம் சென்றேன். அப்போது தெரியாமல் நான் குதிரையின் வாலில் இடித்து விட்டேன். வலியுடன் திரும்பி பார்த்த எனக்கு ஒரு பெரிய அதிர்ச்சி. நான் இடித்ததில் குதிரை வாலின் முனை இரண்டு அங்குலம் அளவிற்கு உடைந்து விட்டது.

பயத்தில் நான் வாலின் உடைந்த சிறு பகுதியை எடுத்து தூரமாய் தூக்கி எறிந்து விட்டேன். பயத்தில் என்ன செய்வதென்று அறியாத நான் மந்தையில் இருந்து ஒரே ஓட்டமாக வீட்டுக்கு ஓடி வந்துவிட்டேன்.

வீட்டுக்குள் நுழையவும் ஆத்தா என்னிடம் வந்து “என்னடா ராசா அதுக்குள்ள வந்துட்ட. மந்தையில பயலுக யாரும் இல்லையா” என கேட்டது. “இல்லை ஆத்தா எல்லாம் பெரிய பசங்களா இருக்காங்க. என்னை ஆட்டத்துக்கு சேத்துகிற மாட்டேன்கிறாங்க. அது சரி அடுத்து என்னிக்கி அமாவாசை வரும்” என்று கேட்டேன்.

“இன்னிக்கு தான் ராசா அமாவாசை. அடுத்து ஒரு மாசம் கழிச்சு வரும். இன்னிக்கு பொழுது இறங்கின அப்புறம் வெளிய எங்கேயும் போகாத ராசா. கருப்பன் குதிரையில தீர்ப்பு கொடுக்க வருவாரு” என ஆத்தா கூறியது. எனக்கு உடல் வியர்த்து கொட்ட ஆரம்பித்தது. நேராக சென்று பாயை எடுத்து விரித்து படுத்து கொண்டேன். ஆத்தா நேராக வந்து என் கழுத்தையும், நெஞ்சையும் தொட்டு பார்த்துவிட்டு “அடி ஆத்தி புள்ளைக்கு இப்பிடி காய்ச்சல் அடிக்குதே” என்று புலம்பியது. அந்த நேரம் அங்கு வந்த என் அப்பத்தா “புள்ளை எதையாச்சும் பாத்து பயந்திருக்கும் போல. இளங்கி பூசாரிகிட்ட கூட்டிட்டு போய் திருநீறு வாங்கி கொடு என்று சொல்லிவிட்டு சென்றது. பூசாரியிடம் சென்று திருநீறு வாங்கி வந்த பிறகும் காய்ச்சல் குறைவதாய் இல்லை. இரவு கருப்பசாமி வந்து என்னை தண்டிப்பார் என்று பயம் என் மனதை ஆழ்த்தியது.

அன்று இரவு எனக்கு தூக்கமே வரவில்லை. ஆறு முறை எழுந்து அடுப்படிக்கு சென்று தண்ணீர் குடித்து விட்டு வந்தேன். தண்ணீர் 6 முறை என்றால் அதை பயத்தில் பதினைந்து முறையாவது வெளியேற்றம் செய்திருந்தேன். அதையும் மீறி நள்ளிரவு இரண்டு மணி அளவில் சற்று கண் அசர்ந்தேன். கருப்பன் அருவாளுடன் வந்து என்னை வெட்டும் கனவுகள் நிரம்பியதாய் இருந்தது அந்த தூக்கம். மறுநாள் காலை விடிந்த பின் தான் எனக்கு காய்ச்சல் சற்று குறைந்திருந்தது.

வாழ்க்கையின் தேடலுக்காக இன்று வெளி மாநிலத்தில் வந்து குடியேறி விட்டாலும், ஊருக்கு செல்லும் ஒவ்வொரு முறையும் கோவிலுக்கு சென்று மண் குதிரையும் அதன் உடைந்த வாலையும் சிறிது நேரம் நின்று ஆழ்ந்து நோக்கிய பின்னே வீட்டிற்கு திரும்புவேன். இன்றளவிலும் கூட அமாவாசை நாட்கள் என்றால் மனதில் சிறிதளவும் பயம் இருந்து கொண்டே தான் இருக்கும். இருக்காதா பின்னே!!!

எழுதியவர் : ராம்குமார் (17-Jun-12, 4:53 pm)
பார்வை : 446

மேலே