சாலை விபத்து
சாலையில் செல்லும் வாகனங்களைக் கணக்கிட்டுக் கொண்டே தன் பயணத்தை தொடர்ந்தான் விவேக். சாலை நீளத்திற்கு வாகனமும் நீண்டு கொண்டேயிருந்தது. ஒரு கட்டத்தில் அவன் மட்டுமே பயணித்துக் கொண்டிருந்தான், வாகனங்கள் வரிசையாக அணிவகுத்துக் கொண்டேயிருந்தன ஒழிய, எதுவும் முன்னேற வில்லை. யோசித்தபடியே சாலையின் ஓரத்தில் வேகமாக நடந்தான் விவேக்.
சில ஆயிரத்தில் வாங்கியதும், சில லட்சத்தில் வாங்கியதும், ஒன்றாய் வரிசையிட்டு நின்றது. உலகில் சமத்துவம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. நாம் தான் சரியாக அதை பயன்படுத்தவில்லை என்று சிந்தித்தப்படியே வந்துவிட்டான் விவேக் அந்த வண்டிகளின் முன்னால். அவசரமாய் வந்தவனுக்கு அவசரமாய் தீர்ப்பு எழுதப் பட்டிருந்தது. ரத்தம் உள்ளே மட்டும் ஓடவில்லை, வெளியேயும் ஓடிக்கொண்டிருந்தது, ஆனால் பார்க்க தான் மிகவும் கோரமாய் இருந்தது. பைக்கில் அடிபட்டு கிடந்தவனைத் தூக்க யாரும் வரவில்லை. அவனுக்கும் முடியவில்லை தன்னை தூக்கி நிறுத்த, என்ன செய்வது வாழ்க்கை சில நேரம் அனைத்திற்கும் துணையினைத் தேடச் சொல்கிறது.
கூட்டம் மொய்த்த அளவிற்கு, அங்கு ஈ மொய்க்கவில்லை. ரத்தம் ஆறாய் ஓடுவதைப் பார்த்து, விவேக் வேகமாக அந்த பைக்கினையும், அந்த நபரையும் தூக்க எத்தனித்தான். எப்போதும் யோசனைச் சொல்ல ஆயிரம் பேர் வருவர், யோசித்து செயல்பட ஒருவரும் வரமாட்டார்கள். "ஏய் தம்பி, இது போலீஸ் கேசு, கொஞ்சம் பொறுப்பா, என்னமோ ரொம்ப வேகமா வந்துட்ட" என்றார் ஒருவர், தலையாட்டும் மந்தையாடுகளாய் அதனை வழிமொழிந்தனர் ஒரு சிலர். ஈரம் சிலருக்கு இருக்கத் தான் செய்கிறது, "தம்பி, நீ தூக்கு பா, இப்ப கோர்ட்டே சொல்லியிருக்கு முதலுதவி செய்ய" என்று சொல்லியபடியே இருவர் வந்தனர்.
ஒரு சில நொடிகளில், அந்த இடம் பொது கூட்டம் ஆனது. நல் உள்ளங்கள் சில, சீக்கிரமாய் அவனை அவன் பைக்கிலிருந்து அப்புறப்படுத்தி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்ய உதவினர். அவன் மயக்கத்தில் மூழ்கும் சில நொடிகளுக்கு முன்னால் விவேக்கிற்கு தன் கண்ணாலே நன்றி சொன்னான். ஒரு பைக் விபத்தில் ஒரு கையிழந்த மாற்றுத் திறனாளியான விவேக்கிற்கு தெரியாதா அவனின் வேதனையும், சோகமும். அன்று பைக் விபத்தில் காலத் தாமத்தால் கையிழந்திருந்தான் விவேக், நம்பிக்கை இழக்காமல்...