சிவனடியானின் தோத்திரம்.

நான் ஒரு சிவனடியான்;
எந்நேரமும் சிந்தையில் சிவத்தைக் கொண்டவன்.
மனதில்
சிவத்தைக் கொண்டால் அவத்தைகள் நீங்கும்.
எனது நண்பர் ஓர் கிறித்தவர்.
அவர் எனது கவிதைகளைப் படித்துவிட்டு
ஒரு தோத்திரம் எழுதுங்களேன் என்றார்.
என்னுள் இருக்கும் ஈசனோ அன்பின் சொருபம்.
அவரே
"ஒரு தோத்திரம் எழுது மகனே"
என ஆணையிட்டார்.
அவரே உள்ளிருந்து ஓதினார்; நான் எழுதினேன்.

இதுவே இந்த சிவனடியான் தோத்திரம்.


தோத்திரம் சொல்லுகிறேன்,
ஆண்டவரே,.....அடியேன்
அன்பாலே ஒரு தோத்திரம் பாடுவேன்.
தோத்திரங்களை மாலையாக்கி
உமது உள்ளத்தில் சூடுவேன்.
கள்ளமில்லா உள்ளத்தில் உம்மைகொண்டு
ஆனந்த வெள்ளத்தில் ஆடுவேன்.
உமது புகழைக் கூவிக்கொண்டே
உலகமெங்கும் ஓடுவேன்.
பரிசுத்தமனவரே, உம்மை
நினைத்தாலே பாவிகள் யாவரும் பரிசுத்தமாகிறோம்.
அழுக்காறு நீங்காது அவதியுற்ற எம்மை
அளப்பரிய அன்பாலே ஆதரித்த தேவா!
எங்கள் எல்லோர் உள்ளத்திலும்
எப்போதும் நிறைகின்றாய், உறைகின்றாய்!
இந்த மகிமையை எங்கனம் மறப்போம்?
ஒன்றை நினைத்தால் மற்றது மறைந்துபோம் எமக்கு.
ஒருவரையும் மறக்காது எங்கள் எல்லோரையும்
உமது உள்ளத்தில் நினைத்து
அருள் பாலிக்கும் ஆண்டவரே!
தமது உள்ளத்தில் கருணையை மட்டும் கொண்டீர்!
நாங்களோ
கோப, தாப, பாபங்களில்
வேக மோக சோஹங்களில்
விருப்பு வெறுப்பு மறுப்புகளில்
உண்மையாம் பொறுப்பினை இழந்தோம்!
ஆயினும் ஆண்டவரே!
தாயினும் இனிய உமது தயவாலே
நல்வாழ்வு பெற்றோம்.
நல்வாழ்வு தந்தவரே!
உமக்குத் தோத்திரம் சொல்லுகிறோம்!
உமது அன்பிற்குத் தகுந்த
பாத்திரம் ஆவதற்கே இத்தோத்திரம் சொல்லுகிறோம்!
ஆத்திரம் மிகுந்த இவ்வுலகில்
தோத்திரம் சொல்லி அடைக்கலம் புகுந்தோம்.
ஆயினும் அன்பற்று பண்பற்று துன்புற்றோம்.
நீரோ நிரந்தர அன்புதாரர்.
யாமும்,
நிரந்தர அன்பில் நீங்காதிருக்க,
ஆண்டவரே, அருள் பாலிப்பீர்.
தோத்திரம் சொல்லும்
எமது குற்றங்கள் யாவையும் மன்னித்து,
குற்றமற்ற குணத்தையும்
குறைவற்ற வாழ்வையும் அருள்வீர்,ஆண்டவரே!

பாலு குருசுவாமி.

எழுதியவர் : பாலு குருசுவாமி. (17-Jun-12, 5:36 pm)
சேர்த்தது : Baluguruswamy
பார்வை : 168

மேலே