குடிமகன்

நாளிதழில் ஒரு செய்தி...
செயல் முறை விளக்கக் கூட்டம்!
புதியதோர் மதுபானம் அறிமுகம்
"நாள்தோறும் முப்பது மில்லி
சரக்கடித்தால் -நீ
'பொறுப்புள்ள குடிமகன்'
அறிமுகத்தில்
அதிகாரியின் விளக்கம்!
அவர் பேச்சில் மயங்கிய
நண்பனின் கதையோ
பரிதாபம்...
'பொறுப்புள்ள குடிமகனில்
ஆரம்பித்த பழக்கம்
இன்று-
வெறுத்தொதுக்கும்
தடிமகனில் முடிந்தது!
கல்விக் கூடம் ஒருபக்கம்
கடவுள் கூடம் மறுபக்கம்
நடுவிலே கள்ளுக் கூடம்!
தெருவோரச் சாக்கடையில்
தந்தையின் அலங்கோலப் படுக்கை
பக்கத்திலே
தட்டி எழுப்பும் தனயன்!
அவனோ-
பத்து வயது பாலகன்...
அதனால் தானோ என்னவோ,
சந்து பொந்துக்குள் மறைந்து
சரக்கடிக்கும் சிறுவர்கள்!
அதட்டி விரட்டினால்
சிறுவர்கள் வசனம் பேசுகிறார்கள்
"என் வழி... தந்தை வழி!"
நல்லதோர் வீணை செய்தே
அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
இது சிவசக்தியிடம்
பாரதியின் கேள்வி!!
உங்கள் குழந்தை
புழுதிக்கு போகலாமா?
புரிந்து கொண்டவர்கள்
புண்ணியம் செய்தவர்கள்
மாண்புமிகு மாணவனே...
உன்னை சுற்றி
ஓராயிரம் ஒழுக்கக் கேடுகள்
கண்சிமிட்டி அழைக்கும்
சாபக் கேடுகள்
திரும்பி பார்க்காதே!
பார்த்தல்
படுகுழியில் தள்ளிவிடும்!
உள்ளத்தில் உறுதியை போட்டு
நல்லோழுக்கத்தோடு வாழ்ந்து காட்டு!
அதுவே
உன் தலைமுறைக்குச்
சேர்த்து வைக்கும் சொத்து!