அம்மா எங்கே?
31.05.2012 ல் 84 வயதில் எங்களை விட்டுச் சென்ற அம்மாவிற்கு இரங்கல் கவிதை.
எங்கள் வீட்டில் பிறந்து
உங்கள் அம்மாவை இழந்தீர்கள்
பிறந்த பத்து நாளில்,
வளர்ப்பு அன்னையால்
வளர்க்கப்பட்டீர்கள் செல்லமாக;
எல்லோர்க்கும் செல்லப்பெண்,
தாய்மா மனையே மணந்தீர்கள் பதியாக - பதி
னான்கு வயதில்,
பெற்றீர்கள் தலைமகனாய் என்னை,
எட்டுஆண் பிள்ளைகள் அடுத்தடுத்து
நேற்று முதல்நாள் மறைந்தீர்கள் எங்களை விட்டு;
நேற்று வைத்தேன் கொள்ளி
இன்று தேடி வந்தேன் உன்னை எண்ணி,
உன்னை இங்கு காணவில்லை இன்று
அம்மா! அம்மா! அம்மா!
நம் வீட்டில் -
நெடுங்கொட்டடிக்கும் அடுப்படிக்கும்
ஓடிய உன்கால்கள் எங்கே,
குறும்பு செய்த பொழுது – விசிறி
எடுத்து விரட்டிய உன்கைகள் எங்கே?
வகைவகையாக எங்கள் சுவையறிந்து
வாயில் ஊட்டும் உனதுகை எங்கே?
கல்லூரி சென்ற பொழுது வாழ்த்தி
கடிதம் எழுதிய உனதுகை எங்கே?
வயதான போது எங்கள் நலம்
வேண்டி ’ராமஜெயம்’ எழுதியஉன் கையெங்கே?
முதிர் வயதில் மூட்டு வலியால்
முடங்கிய உன் கால்கள் எங்கே?
நோய்முற்றி வேதனை யுற்ற பொழுதும்
இனிமையாய்ப் பாடும் உன் குரலெங்கே?
வருவிருந்து பார்த்திருந்து யார்மனமும்
வாடாது உணவிட்ட நெஞ்சமெங்கே?
முதிர்ந்த தள்ளாத வயதில் அப்பாவையும்
எங்களையும் நீவிட்டுச் சென்ற தெங்கே?
அனைத்துமாய் நீஉருகி மண்ணில்
எலும்பும் சாம்பலாய் நீஇங்கே!