சமூக அவலங்கள் (கவிதை திருவிழா)

பாடம்....
பரீட்சை....
அறிவை செம்மைபடுத்தி
மனதை பக்குவப்படுத்துவதற்கேயின்றி

நாளைய உலகில்,
மேலோர் யார்
கீழோர் யாரென பாகுபடுத்தி
பிரிவினை எடுத்துரைப்பதற்க்கல்ல,
கல்வி.

மாறும் உலகில்
நல்மாற்றம் வேண்டின்
நாளையஉலகம் இளைஞர்க் கையில்
எனஇன்றே உரைத்து
இருளையழைத் துநாளை தொலைக்காது;

இன்றைய உலகில்
இருண்ட குகையில்
மற்றும் திறந்தசபையில்,
கொழுத்தக் கொள்ளையர்கள்
கல்விக்கற்பை கண்முன்னரே களவாடுகிறார்கள்
இவ்வாறிருக்கையி லெவ்வாறு சொல்வதினி
கல்வி கண்போன்றது...???

ஆசானை,
கல்வித்தாயின் மகனென்பர்

இன்றோ
தாயின் மானம்
தின மிழந்து துடிக்கிறது
மானம்காத்திட மகன்கள்பெற்றும்
காப்போரின்றி தவிக்கிறது

மறுபுறமோ
நாளை வினாயெழுந்துவிடும்போலும்,
கல்வித்தாயையே
வேசியாக்கி விட்டார்களோயென....???
படித்தும் படிக்காத
அரசதி காரிகள்
அரசியல் வாதிகள்
மேலும்,
படித்தும்புத்தியற்ற பெற்றோர்கள்,
கல்வியை
விலைமாதென நிர்ணயித்து
விலைகொடுத்து
வேசி இவளென, வெட்கமின்றி
விளம்பரப்படுத்துகின்றனர்

இப்போதாவது உண்மைகூறுங்கள்...,
நாளைய உலகம்
இளைஞர்க் கையிலா???
இல்லை
நாறிய உலகம்
இளைஞர்க் கையிலா???

கல்வி யழிந்தால்
மானிடப் பிறவிமுற்று மழியும்
ஆகையால்,
நாளைமலரும் மழலைப்பூக்களுக்கு
இன்றே மரணசாசனம் எழுதிவிடாதீர்

இனியேனும், நல்மாற்றம் வேண்டின்
அண்ணல்காந்தி யுரைத்ததுபோல்
முன் யார்வருவாரென காத்திராது
நீயாக முன்வந்து,
முடிவெடுத்து உறுதியோடுமுன்னேறு.

கயவர் பிடியிலுள்ள
கல்வித்தாயை விடுத்து
சமகல்வியை அனைவர்க்கும் கொடுத்து
நற்சமுதாயம் படைப்போம் வாரீர்.

எழுதியவர் : A பிரேம் குமார் (28-Jun-12, 7:42 am)
பார்வை : 357

மேலே