கருப்பு தேவதையே !

கருப்பு தேவதையே !
கள்ளிக்காட்டு தேன் சுளையே !
நீ சமஞ்ச நாளில் - உன்ன
விழித்திரையில்
படம் பிடிச்சேன்,
ஊர் உறங்கும் வேளைகளில்
தூக்கமின்றி பரிதவிச்சேன்.

செருப்பின்றி நீ நடந்த
பாதைகளில் - உனை
தொடர்ந்தேன்,
விருப்பம் நீயும்
சொன்ன பின்னே
செறுக்குடனே - நான்
திரிஞ்சேன்.

கடந்து வந்த பாதைகள
கணக்கு பண்ணி பார்கையில,
திருப்பம் வந்த நாள் முதலாய்
சேதாரம் நெஞ்சுக்குள்ள.

நொடிந்திருக்கும் நேரத்தில
எங்கு போன நீயும் மெல்ல,
இடி தாங்கும் இதயமில்ல
தெரியாதா பாவி புள்ள ? .

குருத்தோலை ஞாயிறன்று
ஊரொன்று கூடுகையில்,
ஊர் எல்லை வீட்டில் - நாமும்
கூடியது நினைவில்லையா ?.

கயித்துக் கட்டில் அழுத்துமுன்னு
கட்டாந் தரையில்
நான் கிடக்க
நெஞ்சாங்கூட்டில் தலை சாய்த்து
தூங்கியது நினைவில்லையா ?

கருவாடு பொறிச்சு வச்சு
குறும்பாடு கறி சமைச்சு - சுவையாக
விருந்து வச்சு, பாயசம் ஊட்டையில
மனம் நெகிழ்ந்து போகுமடி - அந்த
பாசம் இன்று எனக்கு இல்லையா ?

பனைக்காயில் பனியாரம்
நீ சுட்டு கொடுக்கையில,
பணக்காரன் வந்தவுடன்
பயணமுன்னு சொல்லலியே !

சிட்டாக நீ பறந்த
சிறைக்கூண்டில் - எனை
அடைச்ச,
தேனமிர்தம் நீ உண்று
திராவகத்த எனக்களிச்ச.

குறிஞ்சி மலராக -உன்னை
நான் நினச்சதுக்கா,
நெருஞ்சி முள் எடுத்து - என்
இதயம் தைத்து சென்ற ?

செகப்பா ரத்தம் வந்தா - உன்
நெஞ்சு நோகுமுன்னு,
நிறமில்லா திரவமொன்னு
கண் அவிழ்ந்து கொட்டுதடி.

கயலாக எண்ணி
கருத்தாக பார்த்ததுக்கு,
புயலாக நீ வந்து
புரிந்ததெல்லாம் போதுமடி.

உடை வாளை - நீ
எடுத்து
உருக்குளைத்து
போன பின்னும்,
உதட்டு ஓரம் மட்டும் - உன்
பெயரே சொல்லுதடி .

- நிஷான் சுந்தரராஜா -

எழுதியவர் : நிஷான் சுந்தரராஜா (29-Jun-12, 1:18 am)
பார்வை : 479

மேலே