[272 ] புதிய தல்ல ஆயினும் புகலுவேன்..!
அன்னையும் பிதாவும் தன்னலம் இலானும்
முன்னறி தெய்வம்; மூத்தோர் வார்த்தை
சாத்திரம் ஆகும்; சாதிகள் இரண்டே!
ஆத்திரக் காரன் அறிவை இழக்கிறான்!
சரிவிலும் உயர்விலும் சமமாய்ப் பழகு!
வரிகளால் இல்லை பூனையும் புலியும்!
பிச்சை ஏற்றும் இச்சி கல்வியை!
கல்வி கரையில; கற்பவர் நாட்சில!
நாள்பல வாயினும் தாள்,அது கைவிடேல்!
தாளின் ஈட்டி வேளாண் செய்திடு!
கைவரல் எண்ணாச் செய்கையே தவமாம்!
தவமே முயற்சி! அவமே சோர்வு!
ஆர்வக் காரன் சோர்வை அறியான்!
தேர்வன அறிந்து திறம்படச் செய்யின்
பார்,அவர் புகழைப் பாடும், பரவும்!
தானமும் தவமும் ஆனதே வாழ்க்கை!
ஈனமில் செயலே மானமாய் எண்ணு!
தேடி வாழ்க அன்பை!
கூடி வாழக் கோடி நன்மையே!
-௦-