கனவு
கண் எட்டும் தூரம் வரை பொட்டல்காடாய் இருந்தது.
விழிகளைக் கசக்கி,இமைகளை விரித்துப் பார்த்தான் ஆதி.
வியாபார நிமித்தமாக சென்னை வந்ததும்,10கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தில் வெற்றிகரமாய் கையெழுத்திட்டு,
அசதியின் மிகுதியால்,உடை கூட மாற்றாமல் தன் ஆடம்பர அறையின் பஞ்சு மெத்தையில் படுத்தது வரை நினைவுக் கிடங்கில் பத்திரமாய் இருந்தது.
பின் எப்படி இந்த இடத்திற்கு வந்தான் என்று அவனால் கடுகளவும் புரிந்துகொள்ள முடியவில்லை.
ஆடைப்பைகளில் துழாவினான்.
கைப்பேசி இல்லை.
மனிதர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்று கூவல் விடுத்தான்.
பதில் இல்லை.
அவன் நிறுவனத்தின் பங்குகள் போல அவன் பயம் சிறிதும் சரியாமல் சீராய் அதிகரித்துக் கொண்டிருந்தது.
நடக்கத் தொடங்கினான்.
கடந்த நேரமும் தூரமும் அவன் உணரவில்லை.அப்படியொரு குழப்பத்தில் அவன் மனம் சிக்கியிருந்தது.
மனக்குழப்பத்துக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பதால் உடல் தன் சோர்வை வெளிக்காட்டியது.
வெயிலின் வெளிச்சம் வெட்ட வெளியில் பளிச்சென்று வீசிய போதும் இருளாய் உணர்ந்தான். மயங்கினான்.
மறுபடி கண் திறந்த போது விழித்திரையில் பச்சை நிறம் பதிந்து வியப்பூட்டியது.
மரங்கள். செடிகள்.
சருகுகளின் சலசலப்பில் காடு அவனை வரவேற்றது.
அருகில் ஓடிய ஆற்றின் அலை தாகத்தால் தற்கொலை செய்த அவன் நாவுக்கு புத்துயிர் ஊட்டியது.
அடைக்கப்பட்ட புட்டிகளில் கிடைக்கும் தண்ணீரின் கசப்பு புரிந்தது.
இலவசமாகக் கிடைத்தாலும்,தரமானதாய் இருப்பது இயற்கையின் படைப்புகளைத் தவிர வேறேதுமில்லை என்று தோன்றியது.
வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு சோதனையைச் சந்தித்தான்.
பசி.
மீண்டும் நடக்கத் தொடங்கினான்.
"உணவுக்கு இடது பக்கம் போ" என்ற குரல்,
"யாரது" என்ற இவன் கேள்விக்கு பதில் அளிக்கவில்லை..
பயம் தொற்றினாலும் ஒரு நம்பிக்கையுடன் சென்றான்.
ஒற்றையடிப்பாதை இருந்தது. அதில் தொடர்ந்தான்.
அதன் முடிவில் ஒரு சாலை.
சாலையின் இரு பக்கமும் வயல் வெளிகள்.
அவனை மறந்து தொலைந்து கொண்டிருந்தான் அதன் அழகில்.
அங்கு வந்த ஒரு இளைஞனைப் பார்த்து வினவினான்,
"nearby எதாவது hotel இருக்கா"
இவன் உயர் ரக உடையினை வித்தியாசமாகப் பார்த்த அவன்,
"நேரா போய் வலதுபக்கம் திரும்புங்க.ஒரு கடை உண்டு"
காட்டிய வழியில் சென்றான்.
அவன் குளியல் அறையை விட சிறிதாய் இருந்தது அந்தக் கடை.
"சாப்புட என்ன இருக்கு?"
"இட்லி,தோசை,பூரி."
"how much"
"அதெல்லாம் இல்லைங்க."
"I mean எவ்ளோ ரூபா?"
"ஒரு இட்லி 2 ரூபா."
"four"
அவன் விரல் காட்டியதால் புரிந்து கொண்டு சரியாக வைத்தார் கடைக்காரர்.
பசித்துச் சாப்பிடுவதில் உள்ள சுகம் உணர்ந்தான்.
"factory வரதால நம்ம ஊர சீக்கிரமே காலி பண்ணனுமாம்.
சே.நம்ம விவசாய நிலத்த அழிச்சு வர factory வெளங்காது"
ஒரு இளைஞன் குமுற,
"விடுடா. பணப்பெருக்கத்துக்காக இயற்கையையும் இந்த கிராமத்து மனுஷங்களோட வாழ்க்கையையும் கெடுக்குற இந்த மாதிரி பண முதலைங்க தானா திருந்துனா தான் உண்டு."
இன்னொருவன் விதி விட்ட வழி என்று பேசினான்.
யாரை பற்றிப் பேசுகிறார்கள் என்று குழம்பியவாறே,
சாப்பிட்டு முடித்து பர்ஸ் எடுத்தான் ஆதி.
கார்டுகள் இருந்ததே தவிர காசு இல்லை.
"கார்டு வாங்கிக்குவீங்களா?"
"அப்படின்னா?"
"ok.என் கிட்ட காசில்ல.have this."
என்று தன் தங்கச் சங்கிலியைக் கொடுத்தான்.
"பரவாயில்ல தம்பி.ஏதோ காசு கொண்டார மறந்துட்டீங்க போல.நீங்க மறுபடி இந்தப் பக்கம் வந்தா குடுங்க" என்றார் சங்கிலியை மறுத்தபடி.
"இப்படியும் மனிதர்களா? நானெல்லாம் ஒரு மனிதனா?"
வெட்கித் தலைகுனிந்தான்.
பசியால் மறந்து போயிருந்த கேள்விகள் இப்போது தான் அவன் மூளையில் உதயமாயின.
"இது என்ன ஊர்?"
"அரசனூர்"
அந்த பெயர் அவன் நினைவை உறுத்த,
"எந்த factory பத்தி பேசுறாங்க?"
"ஆதி chemical factory "
கடைக்காரர் சொல்லி முடிக்க,
மயக்கம் வருவதாய் உணர்ந்தான்.
விழித்துப் பார்த்தபோது,அதே ஆடம்பர அறையில் இருந்தான்.
"அந்த அரசனூர் chemical factory project stop பண்ணுங்க."
அலைபேசியில் உத்தரவு பிறப்பித்தான்.
"y sir?" அவன் மேளாலர் கேட்டார்.
"do what I say"
"ok sir", சொல்லி துண்டித்தார்.
இயற்கை அழகானது.எதிர்பார்ப்பின்றி பிறருக்கு உதவும் மனிதர்கள் அதைவிட அழகானவர்கள்.
பணத்தாசையால் இரண்டையும் அழித்துவிடக்கூடாதென்று ஒரு நல்லுணர்வு,
அந்த அழகான ஆழமான கனவால் அவனுள் ஓடியது.
மதியம் ஒரு மணி வரைக்கும் ஏன் தூங்கினான் என்று எண்ணியவாறு படுக்கையில் இருந்து இறங்கி நடந்தான்.
...............................................
"கடவுள் இருக்கிறான்"
தங்கள் கிராமம் தப்பித்ததை எண்ணி மக்கள் மகிழ,
"ஆமா.ஆமா"
தங்களுக்குள் மட்டும் கேட்கும் ஒலியளவில் சொல்லிச் சிரித்துக் கொண்டே நடந்தனர் சில இளைஞர்கள்
..................................................
கனவில் காட்டில் கீறிய முள் தடம் நிஜத்தில் எப்படி தன் காலில் உள்ளது என்று மீண்டும் குழப்பத்தின் கயிறுகள் ஆதியை சூழ்ந்தது.