அப்பாவிடம் அடிவாங்க ஆசை

பள்ளி முடிந்தவுடன்
வீட்டை அடைய
நடக்க வேண்டும்
சில தூரம் நண்பர்களோடு

வயல் வரப்புகளில்
வயதான கிழவனை போல்
தடுமாறி நடந்து
ஆத்தங்கரையை அடைவோம்

ஆத்து தண்ணீரை
அள்ளி குடித்து
துள்ளி விளையாடும் மீன்களை
கூடி பிடித்து
குட்டி கவரில் போட்டு
கட்டி எடுத்துகொள்வோம்

நண்டு கால்கள்
கைகளை கடிக்க-எங்கள்
கடிகார சூரியனோ
கைகாட்டி மறைய தொடங்குவான்

ஆத்து கரையோரம்
காய்த்து கிடக்கும்
கத்தாளை பழத்தை
தினம் பறிக்க முயல்வோம்

தேர் போல் வளந்த கத்தாளை
சிவக்க பழுத்த
கத்தாளை பழம்
எச்சிலை விழிங்கி கொண்டே
எட்டி பறிக்க எண்ணி
குத்தி கொள்வோம்
கத்தாளை முள்ளை

தின்றால்
நாக்கு சிவக்கும்
பறிக்க நினைத்தால்
முள் குத்தி
விரல் சிவக்கும்

காயம்பட்டு நாங்கள்
பறித்த கத்தாளை பழத்தை
நாக்கு சிவக்க தின்று விட்டு
வீட்டுக்கு போனால்

வாய் திறந்து பேசும் பொது
சிவந்த நாக்கு
காட்டிகொடுத்துவிடும் அப்பாவிடம்

முள் காயங்களின் வலியை விட
அப்பாவின் அடி
வலி கொஞ்சம் அதிகம்தான்

ஆத்து கரைக்கு இனி போவிய டா
என அப்பா ஓங்கி அடிக்க
நானும் ஓ னு கத்திகொண்டேன்
பொய் சத்தியம் செய்வேன்
இனி ஆத்து கரைக்கு போகவே மாட்டேன் பா...

பிடித்த மீன்களை
பானையில் அடைத்து
வாங்கிய அடிகளால் வரும் அழுகையை
தொண்டையில் அடைத்து
புத்தக பையில் இருக்கும் மீதி
கத்தாளை பழத்தை
மெல்ல தின்பேன் அப்பாவிற்கு தெரியாமல்...

என்ன செய்வது
ஆத்து மீன்கள்
கத்தாளை பழம்
அப்பாவின் அடி
அன்று கிடைத்த வெகுமதிகள்

இன்று ஆத்தங்கரையில்
நின்று நினைக்கையில்
சிரிப்போடு
ஏக்கங்கள்தான் மிஞ்சிகிறது

மீண்டும் கிடைக்காத
அந்த பருவம் ???

மீண்டும் ஒரு முறை
ஆத்து கரையோரம்
மீன்குட்டி பிடித்து
கத்தாளை பழம் தின்று
அப்பாவிடம் அடிவாங்க ஆசை....

எழுதியவர் : பாலமுதன் ஆ (4-Jul-12, 8:15 am)
பார்வை : 457

மேலே