சந்தையில் மலியும் உயிர்களின் விந்தை
மனித மனங்கள் இறுகி
இப்போது போடப்படும்
தார்ப்பாதைகளாய் கருகி
தன் வட்டப் பாதையை விட்டுச்
சறுகி விட்டது.
செத்துப் போகும் உடல்கள்
எண்ணிக்கையின்றி புதை குழிக்குள்
புகுந்து விட
உயிரைத் தின்னும்
உயிர் தின்னிகள் மட்டும்
பதகளிப்பின்றி நாடகமாடுவது ஏன்?
சாகடிக்கும் தொழில்
உன் உயிர் சாவுக்குக் காவு போகும் மட்டுமே...
கொல்லும் தொழில் சாதாரணம்
மனம் ஒன்று உண்டானால்
வாழும் தொழிலே
மனிதனுக்கு உண்டான வரம்
ஒன்று மட்டும் உண்மை
காலனின்றி காவு போன உயிர்கள் எல்லாம்
அண்ட வெளியில்
சந்தை போட்டு ஓலமிடுகிறது
தம்மை கொன்று விட்டு குந்தியிருக்கும்
கொலை காரர்களின் உயிரை கூறு போட
காத்திருக்கிறது.
வேரோடு பிடுங்கி மார் தட்டிக் கதைக்க
போர் தொட்டிழுக்க
காத்திருக்கிறது - அந்த
ஆத்ம தேசம்
நீதிகளை தேடுவதை நிறுத்திவிட்ட ஆத்மாக்கள்
சந்தைகளில் நியாயமான கோரிக்கை கொண்டு
நீதவான்களாக
உம் உயிரை மலிந்த விலையிலிட
காத்திருக்கிறது.
தராசுகள் நிலைகளை மறந்து
தலைகீழாய் நிற்பதால்
ஆத்மாக்கள் தலைகீழாய் நின்று
தராசுகளாய் மாறுவதாயிற்று....