நண்பன் என்றொரு உலகம்
 
 
            	    
                -----நண்பன் என்றொரு உலகம் ---- 
சுதந்திரமில்லா சூழ்நிலையில் 
துப்பாக்கி ஏந்திடலாமென்று 
துணிந்த பிறகு 
அறவழியை எனக்கு 
அறிமுகபடுத்திய 
அண்ணல் காந்தி  நீ.
நெருக்கடி நேரங்களில் 
அடிக்கடி என் 
அமைதிப் போராட்டமெல்லாம் 
அவமதிக்கபடுகிறபோது 
நேர்மையற்றவரின் தோலை உரி 
நேருக்கு நேர் எதிர்ப்பதே சரி என்று 
நேசிப்பை நீட்டிய 
நேதாஜி நீ
காதல் என்னை 
பிரசவித்து 
அனாதை இல்லத்தின்
அருகேயுள்ள 
குப்பை தொட்டியில் 
கொட்டிவிட்டு போனபோது 
அள்ளி என்னை 
அரவைனைத்து 
நெஞ்சோடு ஒட்டிக்கொண்ட 
அன்னை தெரசா நீ...
கொடுக்க ஒன்றுமில்லை 
உன்னிடம் 
எனினும் 
உன் கடைசி கந்தல் சட்டைவரை 
எனக்கு காணிக்கை தந்தே 
ஏழையாகிப் போன 
பாரிவள்ளல் நீ.
எனக்கு விருந்தளித்த 
விஷகோப்பையை பருகி 
என்  சமூகத்தை வளர்த்தெடுத்த 
சாக்ரட்டீஸ் நீ.
வேண்டாம் இவன் 
வேற்று மதத்தவன் என 
தீண்டாமை வளர்த்த 
காண்டமிருகங்களை 
புறம்தள்ளி 
எனக்கு பூணூல் அணிவித்த 
புது பாரதி நீ.
எங்கோ பிறந்து 
என்னுடன் இணைந்து 
உனக்கு சம்மந்தமில்லாத 
என் தேச விடுதலைக்கு 
உயிர் நீத்த 
உன்னத சேகுவேரா நீ.
பாலைவன மணல்வெளிகளில் 
போதிமரத்தை 
நான் தேடியலைந்தபோது   
பாலிய சிநேகிதனாய் கிடைத்த 
புத்தன் நீ.
என் கல்லடியை வாங்கிகொண்டு 
என் சிலுவையை தூக்கி கொண்டு 
தேகமெங்கும் ரத்தம் சிந்த சிந்த 
என் தெருக்களில் வலம்வந்த 
தேவ தூதன் நீ.
என்னை மேடையேற்றிவிட்டு 
மேதையாக்கிவிட்டு 
தாய் மனதோடு 
தரையில் அமர்ந்து 
கைதட்டி களிக்கும்
பாமரன் நீ.
விபத்தில் நான் 
சேதமடைந்தால் 
துடியாய் துடிப்பாய் 
என் சாவை தடுக்க.
தோல்வியில் நான் 
சோர்ந்துவிட்டால் 
பக்கம் இருப்பாய் 
உற்சாகம் கொடுக்க.
சொர்கத்திலும் என்னை 
உதறிவிட்ட போன 
சொந்தங்களுக்கு மத்தியில் 
நரகத்திலும் என்னோடு 
நடந்து வரும் 
நண்பன் நீ.
காட்டிலும் இருட்டிலும் 
என்னோடு உலவும் 
அடித்தாலும் உதைத்தாலும் 
அன்போடு பழகும்
இளைப்பாற என்னருகில்
இன்னொரு உலகம் 
நண்பா! 
நீ அருகிலிருந்தால்   
எனக்கேதடா துயரம்.
---- தமிழ்தாசன்----
என்னை பொறுத்தவரை நட்புகென்று தனி ஒரு தினம் அவசியமில்லை. இருப்பினும் சம்பிரதாயத்திற்காக  சொல்லுகிறேன்.
சந்தோசத்துடன் சொல்லுகிறேன்.
அனைவருக்கும் என் இதயம் கனிந்த இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்.
 
                     
	    
                

 
                                