எனது பதினெட்டு வயது தோழிக்கு
காக்கா கடி
கடித்து பகிர்ந்தோம்
தேன் மிட்டாய்க்குள்
தித்தித்தது நமது நட்பு......!
சிறு பிராயத்தில் பெண்ணே நாம்
சிறகு விரித்தே ஒன்றாய் பறந்தோம்
எனக்கு அடிபட்டால் நீ அழுவாய்
உன் சிரிப்பினில் நான் மகிழ்வேன்
பாழாய்ப் போன பருவம் வந்து
பாகு படுத்தி விட்டதே இப்போது.......!
பண்பாடு நிறைந்த நம் சமூகம் வேறு - இன்று நமை
பார்க்கின்ற பார்வையின் அர்த்தம் வேறு ,,,,,,,!
பாலுணர்வை நாம் வென்று விட்டோமடி
எனினும் நமது
பரிசுத்த நட்பை யாரறிவார்........?
பொல்லாத உலகமடி பெண்ணே - அதற்காக
பொய்யாக நான் உன்னை தங்கை என
சொல்வதற்கில்லை .......!
உறவு சொல்லி குரோதம் வைக்கும்
உயிர்கள் வாழும் இப்பூமியிலே உண்மை நிறைந்த
என் உயிர்த் தோழியடி நீ...........!
எல்லாம் அறிந்தவளடி நீ...........!
புறப்பட்டுச் செல்கிறேன்
உனைவிட்டு வெகுதூரம்
புதைத்துவிடு என் புகைப் படத்தை
பூமிக்குள் நன்றாக
பூக்கள் ஒருநாள் பூத்து வரும் - அப்போது
பூமாலையோடு மேடையிலே நீ இருப்பாய்
உன் மீது தூவப் படும் மணம் வீசும் மலர்களில்
ஒரே ஒரு மலராக அப்போதும் நான் இருப்பேன்
உன் தலையில் விழும் அட்சதையோடு
உன் பாதத்தில் நான் விழுந்தே.......
குலமகளே......திருமகளே..... என
குதூகலமாய் வாழ்த்திடுவேன் ..............
உயிர்களில்லா பொருட்களிலும் என்
உணர்வுகளை நீ பார்த்திருப்பாய்........!
வாழ்க தோழி வாழ்க.....!