பதுங்கல் பாய்ச்சலாய் உருக் கொள்ளும்

அவர்களின் வாழ்க்கை விசித்திரமானது
கடந்த காலங்களைப் போல்
போர் மட்டுமே இல்லையே தவிர
மரணங்கள் பிறந்தபடிதானுள்ளது. . . .!
புவியில் ஒரு புது கொலைநுட்பம்
போரின்றி ஓரினம்,
அவர்க்கு தெரியாமலே அழிக்கப்படுவது
இதுவே முதல்முறை !
அவர்களுடைய வாழ்வு
பதுங்ககழிக்குள்
நாட்காட்டி கிழித்தது பலகாலம்,
இப்போது ஒரு மாறுதல்!
துயிலுரிந்து பகை தின்னும்
தோழிகளின்
சிதைந்த யோனிகளின் கறைபடிந்து
கிழிகிறது . . . .
அங்கீகாரமில்லாத
ஒரு அகதி வாழ்வோடு
ஆறு தசாப்தங்கள்,
நாம் கேட்ட உரிமையை
அதோ அந்த ஆழி கவ்விக் கொண்டது !
எப்பொழுதும் தீண்டலாம் பெரும் விடம் கொண்டு
எங்கள் யோனிகளை
கயவரின் பெரும் நாக்கு,
இனவெறியின் அதியுச்சம்
பகைக்கு எழும் காமப்பசிக்காய்
இரையாகிப் போகலாம்
அம்மண்ணின் பூர்வீகப் பேத்தியினுடல். . . !
அதிகமாகும் அவலத்தின்
முகம் கண்டு
மரணமாய் உலகுணரும்
பதுங்கல்,
பாய்ச்சலாய் உருக் கொள்ளும்
பகை உயிர்க் கொல்லும்!
நெடிலேறிய மிருக நகங்களால்
கீறிக் கிழிந்தது,
அவரவர் வாழ்வும்,வயதும் !
கட்டவிழ்க்கப்பட்ட கடத்தல்களுடனும்
திட்டமிடப்பட்ட சித்ரவதைகளுடனும்
கணக்கில்லாமல்,
உயிர்களைப் பறிக்கிறது !
போதிமரமும் கொலைகளை
மௌனமாய்
சம்மதிக்கிறது!
கடற்கரையில் சுடுகாடு
இல்லையில்லை
கடலே சுடுகாடு!
மரணமே மரணித்துப் போன
மரண விழா,
மே பதினெட்டு!
விட்டுச் சென்ற வலியாகவும்
பகை மீதான வன்மத்தையும்
யாரும் எதிர்பாராத,
ஒரு தேதியில்
செய்தியாக வாசிக்க கூடும்!
ஒரு வல்லரசு
ஒன்றின் உத்தியோக பூர்வ தொலைக்காட்சி
மீண்டும்
தாகத்தின் தேடலில் தாயகத்தின் புதல்வர்களென . . .