அவரை ஏன் திட்டினாய் தம்பி

ஏன் திட்டினாய் தம்பி
அவரை ஏன் திட்டினாய் தம்பி

பெற்று வளர்த்தவர் உன்னை
பேர் சூட்டி அழைத்தவர்
நீ தத்தி வருவதை
தவழ்ந்து வருவதை
பார்த்து சிரித்து மகிழ்ந்தவர்

எனக்கு ஒரு மகன் பிறந்தான்
எனை அவன் காப்பான் பின்னாளில்
என உன்னை முதுகில் சுமந்து
திரிந்தவர் அவர்

படிக்கும் நாட்கள் எல்லாம்
உன்னோடு அழைந்தார் அவர்
பட்டம் பெற்ற நிகழ்வில்
என் மகன் எனச் சொல்லி
சொல்லிப் பூரித்தார்

மய்யழிக்கரையோரக் கதை
கிழவன் போல
பிள்ளையை
சுமந்து சுமந்து
சுமை தாங்காமல் செத்த
கதை போல ஆனதடா தம்பி

ஏன் திட்டினாய் தம்பி
அவரை ஏன் திட்டினாய் ?

உள்ளம் புண்படும்படி நீ
சொன்ன வார்த்தைகளால்
தன் வாழ்வை முடித்துக்கொண்ட
அவரின் உடலைப் பார்த்த நேரம்
நீ என்னிடம்
அழுதாய் ! அரற்றினாய் !
இப்படி ஆனதே என் சொல்லால்
எனத் தேம்பினாய் ! திணறினாய் !
கழிவிரக்கம் கொண்டு
கதறினாய் ! புலம்பினாய் !

வார்த்தைகள் கொல்லும் தம்பி
வார்த்தைகள் கொல்லும்
என் சொல்வது நான் என் சொல்வது!
உனக்கு ஆறுதலாய் நான்
என் சொல்வது ! நான் என் சொல்வது !
அப்பாக்களின் கடுஞ்சொல்லால்
பிள்ளைகள் செத்தது அந்தக்காலம்!
பிள்ளைகளின் கடுஞ்சொல்லால்
அப்பாக்கள் சாகிறார்கள் இந்தக்காலம்!

கை நிறையச் சம்பாதிக்கும்
இளைய சமூகமே !
தங்கள் உடலை
உதிரத்தை நீங்கள்
உயர ஏறும்
ஏணியாக்கி
இற்று விழும் நிலையில்
இருக்கும் பெற்றோரை
ஏளனம் செய்யாதீர்!
ஏடாகூடமாய் பேசாதீர்!
உங்கள் செயலாள்
உளக்காயம் ஏற்படுத்தாதீர்!

பெற்றோருக்கு ஏதும்
செய்யுங்கள் அல்லது
செய்யாமல் இருங்கள் !
ஆனால்
தப்பித் தவறிக்கூட
உதிக்காதீர் சுடு சொல்லை !
மீறினால்
சுடு சொல்லால்
நிகழும் நிகழ்வுகள்
சுடும் உங்களை
நீங்கள் வாழும் காலமெல்லாம்!

எழுதியவர் : வா. நேரு (1-Sep-12, 2:54 pm)
பார்வை : 289

மேலே