ஒளி

கண் ஒளியால்
படம் பிடிக்கிறது
உன் நிஜ உருவத்தை

மனமென்ற மெழுகு
உருகி உருகி
கண்கள் வழியே
கண்ணீர் மணிகள் வழிந்தோடி

உயிருள்ள
விக்ரகங்களாக இருந்திருந்தால்
விருத்தப்பா
பாடி இருக்கும்

இதோ
இவ்வுருகலினால்
மெருகேறும் --இந்த
மனமென்ற மெழுகு

நீ மட்டும் பிறருக்காக
நெருப் பொளியால் உருகி உருகி
உனையழித்துக்கொண்டு
பிறரை வாழ்விக்கும் ஊமை மெழுகே

உன்னிடமிருந்துதான்
கற்றுக்கொண்டேன்.
இந்த இரகசியக்
கருணையை,

மனமென்ற மெழுகில்
கருணை என்ற திரியினை இட்டு
அன்பென்ற நெருப்பேற்றி
எரிய விட்டேன்,

அருளொளி ,உயிரொளி,உண்மையொளி
என மூன்று ஒளிகளும்
மும்மரமாக
எரிந்தன.

ஒளி கொடுக்க நினைக்கும்
அனைத்தும்
தன்னை இழப்பது
முறையல்ல


இதோ
இயற்கையின் வழியில்
சிக்கி முக்கி போல்
இருக்கலாமே !

தன்னை காத்துக்கொண்டு
பிறருக்கும் பலருக்கும்
பல யுகங்களுக்கும் பயன்படும்
இந்த மண் இனத்துப் புத்திசாலி

பயன்படுகையில்
சிறு சேதாரங்கள் இருக்கலாம்
இதைப்பற்றி கவலைப்படாமல்
தனது வேலையை தொடர்கிறது.

நெருப்பை விழுங்கி வைத்திருக்கும்
உறுதியான இறுகிய
மண் மெழுகு
இந்த செம் (கரு)மெழுகு

உதவிய நேரம்
மிகக்குறைவு
உதவிய பொருள்
அப்படிப்பட்டது.

கல்லுக்குள் ஈரம் இருப்பதால் தான்
தேரை உயிர் வாழ்கிறது.
இந்த மனித கல்லுக்குள்
இதயமிருப்பதால் தான்
மனிதமுள்ள மலர்கள் மலர்கின்றன.

நாம் கல்லாக இருக்கலாம்
சூரியன் ,சந்திரன் போல
ஒளி கொடுக்கும் போது

நாம் கல்லாக இருக்கலாம்
சிற்பம் போல் சிந்தனை
ஒளி கொடுக்கும் போது

நாம் கல்லாக இருக்கலாம்
சுமைதாங்கி போல்
சுகவொளி கொடுக்கும் போது

நாம் கல்லாக இருக்கலாம்
பலருக்கு வாழ்வொளி
கொடுக்கும் போது

ஒளி கொடுப்போம்
அன்பு ஒளி கொடுப்போம்
அருளுடனே ...

எழுதியவர் : சுகந்த் (9-Sep-12, 4:55 pm)
சேர்த்தது : சுகந்த்
பார்வை : 164

மேலே