அரசியலுக்கு வா.......!

அரசியல் ஒரு
சாக்கடையென்று
தள்ளி நிற்காதே

சாக்கடையை
நன்னீராக்க வா...

சாக்கடையை நன்னீராக்கும்
திட்டம் ஏதுமுண்டோ
விரைந்து கொண்டு வா...

சாக்கடையில் குளித்து
பழகியவர்களுக்கு அது
சந்தனமாகிப் போவதற்கு
இனியும் சந்தர்ப்பம் தராதே
இப்போதே வா...

அரசியல் தீண்டத்தகாதது அல்ல
தீண்டிப் பார்க்க வா..

இன்றைய அரசியல்
தலைவர்களை
மனசுக்குள்ளாவது
விமர்சிக்க வா....

புதுமை நிறை உலகில்
புத்தாக்க சிந்தனை கொண்டு
பழைய அரசியலுக்கு
பாடை கட்ட வா..

கூட்டணி பெயரில்
கூத்தடிக்கும்
கூறுகெட்ட அரசியலை
கூறு போட வா...

எதிர் கட்சிகளை எல்லாம்
எதிரிக் கட்சிகளாக்கும்
ஏகாதிபத்திய அரசியலை
எதிர்க்க வா...

நியாமான போராட்டங்களை
கூடிப் போராடாமல்
தனித்தனியே போராடி
விளம்பரம் தேடும்
விளம்பர அரசியலை
விரட்ட வா....

கருத்து மாறுபட்டாலும்
கண்ணியம் காக்காமல்
காழ்ப்புணர்ச்சி காட்டும்
கீழ்த்தர அரசியலை
வேரறுக்க வா...

நலத்திட்டங்களை பட்டியடமால்
கொள்ளை அடித்தவைகளை பட்டியலிடும்
கொச்சை அரசியலை
கொளுத்திட வா....

சந்தர்ப்பவாத அரசியலை
சாதி அரசியலை
சவக்குழியில் தள்ளி
சாவு மணியடிக்க வா...

பணபலம்
ஆள்பலம்
இல்லாத அரசியலை
மீண்டும் தர
மார் தட்டி வா...

ஊழலை ஒழித்து
உயர்ந்த நாட்டை
உருவாக்கிப் பார்க்க
உறுதி கொண்டு வா...

வல்லரசு எனும் பெயரை
நம் நாடு வாங்காமல் போனாலும்
நல்லரசு எனும் பெயரை
வாங்கித் தர வா...

கக்கன்
காமராஜர்
போன்ற தலைவர்களை
பிரதிபலிக்க வா...

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (10-Sep-12, 8:18 am)
சேர்த்தது : அஹமது அலி
பார்வை : 142

மேலே