நெஞ்சு பொறுக்குதில்லையே

என் அன்னைத் தமிழே
எனதருமைத் தமிழே....
பல மொழிகளுக்கு
சொற்களை வாரி
வழங்கிய வள்ளலே ........

"மெல்லத் தமிழினிச் சாகும்"
என்ற வரியை
நீயுரைப்பது போல்
பாரதி தம் கவிதை வரிகளில்
பதித்தான்..
வீழும் மொழியை
வாழவைக்க பல
வழிமுறைகளையும் உரைத்தான் ......

உண்ண உணவும்
உடுக்க உடையும்
இருக்க இடமும் போல
கற்க ஆங்கிலமும்
அத்தியாவசியத் தேவையாகி விட்ட
காலத்திலே
உன்னை நினைக்க
உனதருமைப் பாக்களைப் படிக்க
இவர்களுக்கு நேரம் ஏது?.....

தமிழை வாழ வைத்த
தமிழர்கள் மறைந்து போய்
தமிழால் தன்னை வளர்க்கும்
தலைவர்கள் மட்டுமே
எஞ்சி உள்ளனர்
எனும் சேதி
உன் காதிற்கின்னும் எட்டவில்லையா?

தமிழ் வழிக் கல்வி கற்றால்
தாழ்வென்று எண்ணி
ஆங்கில வழிக் கல்வியின் மோகம்
அதிகரித்த காரணத்தால்
"அரசுப் பள்ளிகளிலும்
ஆங்கில வழிக் கல்வி துவங்கப்படும் "
அரசு அறிவிப்பை
நீ அறியாயோ ?....

கையிலுள்ள வைரத்தைக்
கண்ணாடிக் கல் என்றெண்ணி
குப்பையில் போட்டு விட்டு
கையேந்தி பிச்சை கேட்கும்
இவர்களின் நிலையை
எண்ணும் போதெல்லாம்
என் பாரதியே
என் நெஞ்சு பொறுக்குதில்லையே .........

மீண்டும் உலகில் பிறந்து
நம் அன்னைத் தமிழை
புதுப்பொலிவுடன்
மீட்டெடுக்க வாராயோ.......
-பகவதிமணிவண்ணன்

எழுதியவர் : பகவதிமணிவண்ணன் (13-Sep-12, 6:10 pm)
பார்வை : 280

மேலே