தாத்தா பாட்டி கதை

காலம் செலவழித்து நிற்கும்
வாழ்க்கை தனில்
நேரம் நெருங்கி வரும்
வேளை தனில்
நெஞ்சில் இழையோடும்
இந்த நினைப்பையெல்லாம்
யாரோடு தான் பகிர்வதோ?
௦ ௦
;; ;;
கூனல் விழுந்த முதுகினிலே
ஊனம் தொற்றிய மனதினிலே
தள்ளாடும் முதுமையிலே
உள்ளாடும் உளக் குமுறலை
உரைக்க கேட்க யாரும் உளரோ.?
௦ ௦
;; ;;
ஆசையோடு அள்ளிக் கொஞ்சிய
அன்பு பிள்ளை பிஞ்சுகள்
மணிக் கணக்கில் பேசி மகிழ்ந்த
மக்கட் செல்வங்கள்-இப்போது
ஓரிரு வார்த்தை பேசினாலே
அன்று எங்களுக்கு திருவிழா தான்
௦ ௦
;; ;;
பேசத் துடிக்கும் இதழ்களுக்கு
பூட்டுப் போடுவது எதுவோ?
கிழத்துக்கு வேறு வேலையில்லை என்று
கண் படாமல் பேசுவதாய் நினைத்து
காது கேட்க பேசுவார்களே!
௦ ௦
;; ;;
நுரைத்த ஆசைகள் அடங்காமல் வந்து
நரைத்த சிகையுடன் சிநேகம் கொண்டு
பொக்கை வாய் திறந்து பேசும் போது
மொக்கை பேச்சாய் தோணுமோ?
௦ ௦
;; ;;
குப்பைகளை கூட்டிப் பெருக்கி
வீட்டின் ஓரத்தில் தள்ளுவது போல்
ஒரு ஓரத்தில் தள்ளியே கிடக்கிறோம்
ஓய்ந்து போன வாழ்க்கையானாலும்
ஓய மறுப்பதோ வாய்ப்பேச்சுகள் தான்
௦ ௦
;; ;;
நல்லதை எடுத்துச் சொல்வோமே என்று
நாவெடுத்து சொல்லப் போக
எக்கச்சக்கமாய் வங்கிக் கட்டாமல்
எங்களுக்கு தூக்கம் வருவதேயில்லை
௦ ௦
;; ;;
பசிக்கும் நேரம் புசித்திடவே
வயிறு துடியாய்த் துடிக்கும்
வாய் திறந்து கேட்கவோ
அச்சம் வந்து தடுப்பாய்த் தடுக்கும்
0 0
.. ..
" "
சொந்த வீட்டில் பிச்சையெடுப்பதாய்
மனம் கொல்லாமல் கொல்லும்
மீறியும் கேட்டு விட்டால்....
தண்டச் சோற்றுக்கு கொஞ்சம்
பொறுக்க முடியாதோ என
சுறுக்கென வந்து சுடும்-அப்போது
நாணம் நாண்டு விடத் தோணும்
மானம் மாண்டு விடத் தோணும்
௦ ௦
;; ;;
எமனுக்கு எங்கள் உயிரை எடுக்க
ஏன் தான் தாமதமோ ?
எமனை விட எங்களுக்கு அவசரம்;
அவனை சந்திக்கும் நாளுக்காக...
௦ ௦
;; ;;
மகளாய் மருமகள் வாய்த்த
தாத்தா பாட்டிகளுக்கு
முதுமைக் காலம் முழுவதும் வசந்தமே
மகளாய் மருமகளை நினைக்காத
தாத்தா பாட்டிகளுக்கு
முதுமைக் காலம் முழுவதும் நரகமே
௦ ௦
;; ;;
முட்டி மோதும் மனப் புழுங்களை
குடும்ப மானம் காக்க எண்ணி
முதியோர் இல்லம் போகாத
தாத்தா பாட்டிகள் எத்தனையோ?
௦ ௦
;; ;;
எத்தனை புழுங்கள் இருந்தாலும்
பிள்ளைக்கு தீது நேரக் கூடாதென
நேரம் காலம் பார்க்காமல்
அழுது தொழுது வேண்டிக் கிடக்கும்
தாத்தா பாட்டிகள் எத்தனையோ?
௦ ௦
;; ;;
தள்ளாத வயதில் தாளாத மானமும்
தாங்க முடியா சினமும் தான்
எங்கள் இறுதிக் கால சொத்துகள்
இன்னும் எத்தனை எத்தனையோ
சொல்ல முடியாமல் கிடக்குது
மனசு வீட்டின் உள்ளே
சொல்லி விட்டால்
நாளை நாங்கள் வீட்டின் வெளியே
௦ ௦
;; ;;
நாங்கள் செத்த பிறகாவது
எங்கள் பிரிவை எண்ணி
விம்மி விம்மி அழுவீர்களா?-இல்லை
கிழம் விக்கெட் வீழ்ந்தது என்று
மகிழ்ந்து போவீர்களா?
௦ ௦
;; ;;
இளமை யாருக்கும் நிலையில்லை
முதுமையும் வெகு தொலைவில் இல்லை
இந்த தாத்தா பாட்டி நிலையைப் போல்
இனி யாருக்கும் வாரமல் இருந்தால்
அதுவே ஆனந்தத்தின் எல்லை.
௦ 0
;; ;;
(இது திரு கே.எஸ்.கலையுடன் செய்து கொண்ட புரிந்துணர்வின் படி எழுதியது. அவர் போல எழுத முடியாவிட்டாலும். என் அறிவுக்கு எட்டியவாறு எழுதி இருக்கிறேன். குற்றமிருப்பின் சுட்டிக் காட்டுங்கள் தோழர் தோழிகளே.!)