மரம் காப்போம் ! - கே.எஸ்.கலை

நாளை உன் இனம் காக்க
என் இனம் காத்துக்கொள்

கல் அடித்து கனி பிடுங்கி
காயப் படுத்தி போனாலும்
துயரப் பட்டு துடிக்கவில்லை
வலி என்று கதறவில்லை...!

பூ சீவி கள் எடுத்து
பூரித்துப் போனாலும்
வெறி பிடித்துக் கத்தவில்லை
வேண்டாம் என்று சொல்லவில்லை !

வீடு கட்டி வாழ்வதற்கும்
பாடை கட்டிப் போவதற்கும்
கை அசைத்து காற்று வீசி
காத்திருப்பேன் காட்டுக்குள்ளே !

மணமாலை நீ சூட
மலர் மகளை நான் தருவேன்
மங்களமாய் வரவேற்க – வாழை
மரமாக நான் நிற்பேன் !

எரித்து நீயும் பசியாற
விறகாக நானிருப்பேன்
புசித்து நீயும் நலம் வாழ
இலை தந்து மருந்தாவேன் !

எழுதி நீயும் உயர்வதற்கு
ஏடாக நானிருப்பேன்
புழுதி பறக்கும் மண்மீது
பூங்காற்றை நான் தருவேன் !

என் தேகம் இல்லை என்றால்
உன் தாகம் தீராது தெரியாதா ?
பாகம் பாகமாய் அறுத்தாலும்
நிழல் தானே நான் தருவேன் ?

குளிர் காற்றும் குடி நீரும்
நானின்றி உனக்கேது ?
குடிசை வீடோ மாடி வீடோ
நானின்றி உனக்கேது ?

பூக்களால் வாசம் வீசி
மூங்கிலால் கானம் பாடி
மூலிகையாய் நோய் தீர்த்து
நீ வாழ நான் வாழ்வேன் !

ஏடுகளில் வாழவைத்து
காடுகளில் அழிக்கின்றாய்
கேடு கெட்ட மானிடமே
புத்தி கெட்டு போனதேனோ?

மரம் என்றால் வரம் என்று
மனம் நிறைய வாழ்த்துகிறாய்
பணம் கொஞ்சம் வரும் என்றால்
தரம் கெட்டு மாறுகிறாய் !

நான் வாழ ஒருபோதும்-நீ
துளி நீரும் தரவில்லை
நான் இன்றி போனாலோ
துளி நீரும் உனக்கில்லை !

கிளி குரங்கு நரி பருந்து
புலி சிங்கம் பூச்சி எல்லாம்
என் நிழலில் வாழும் போது
எனை அழித்தால் என்னாகும் ?

கொத்து கொத்தாய் பூக்கின்றேன்
கொப்பு கொப்பாய்க் காய்க்கின்றேன்
அத்தனையும் எடுத்துக் கொண்டு
எனை அழிக்க ஏன் வாராய் ?

தீயிட்டு கொளுத்திவிட்டு
நீ கண்ட மோட்சம் என்ன?
சோலை வனப் பாரெல்லாம்
பாலை வனம் ஆகாதா?

ஆறறிவு கொண்டவனே
அக்கறையாய் சொல்லுகின்றேன்
ஓரறிவு நான் அழிந்தால்
உனக்கில்லை வாழ்வென்று !

எண்ணற்ற விதை கொண்டு
மண் மீது வாழுகின்றேன்
தேவை கொண்டு வெட்டும் போது
ஒரு விதையை நட்டு விடு !

நாளை உன் இனம் காக்க
என் இனம் காத்துக்கொள் !

எழுதியவர் : கே.எஸ்.கலை (14-Sep-12, 8:02 pm)
பார்வை : 763

மேலே