பாடும் மரங்கள்..! பொள்ளாச்சி அபி
-நண்பர் கேஎஸ்.கலை எழுதிய கவிதையில் மரம் பேசியது.இங்கு பாடுகிறது அவ்வளவுதான்.! அறிவொளி இயக்கத்திற்காக நான் எழுதிய வீட்டுக்கொரு மரம் குறித்த விழிப்புணர்வுப் பாடல்-படகோட்டி படத்தில் வரும் “தரைமேல் பிறக்கவைத்தான’; ராகம்.சும்மா பாடிப்பாருங்கள்..!
------------------
தரைமேல் இருக்க வைத்தான்-எங்களை
மரமாய் நிறுத்தி வைத்தான்..!
வரமாய் உமக்கெனவே –எங்களை
வாழ்க்கை நடத்த வைத்தான்..!
கட்டிய வீட்டில்;,கதவும் ஜன்னலும்
உமக்காய் அளித்தது யாரோ..?..ஓ..ஓ..
மெத்தைகளிட்டு சுகமாய் உறங்க
கட்டிலை அளித்ததும் யாரோ..?..ஓ..ஓ..
எம்உடலை அறுப்பதும் உயிரை அழிப்பதும்
ஒவ்வொரு நாளும் துயரம்..!
நெடுநாள் வளர்ந்த நிழலாய் இருந்த
கதைகள் இங்கே உலவும்..! -தரைமேல்-
மனிதா..உனது மாசுகள் நீங்க
ஆக்ஸிஜன் கொடுப்பது யாரோ..?.ஓ..ஓ..
ஓசோன் ஓட்டை மேலும் விரிய
தடையாய் இருப்பது யாரோ..?..ஓ..ஓ
பிறப்புக்குத் தொட்டில் இறப்புக்கு பாடை
உறவாய் உனக்கு வாழ்ந்தோம்..!
உயிராய் இருந்தும் விறகாய் இறந்தும்
அடிமை மௌனம் காத்தோம்..! –தரைமேல்-
கொதிக்கும் பூமி ஒருநாள் சீறும்..
குடிநீர் இன்றிப் போகும்…ஓ..!
கடல்நீர் உயரும் தீவுகள் மூழ்கும்
நாடுகள் இங்கே அழியும்..ஓ..!
செல்வமும் மாடியும் இருந்தால்கூட
பயனே இன்றி போகும்..,,
இயற்கையின் பகுதி எங்களைக்
காத்தால் நிலைமை உனக்கு மாறும்.! –தரைமேல்-
மலைமேல் நின்று மழையைத் தடுத்து
ஆறாய் உன்னிடம் தருவோம்..!.ஓ..ஓ..
இனிதாய்க் கனிகள் இலைகள் மருந்தென
இன்னும் உனக்கே தருவோம்...?..ஓ..ஓ..
எம்மை அழித்தால் நீங்கள் அழிவது
காலம் காட்டும் வாய்மை..!
ஒவ்வொரு வீட்டிலும் மரங்கள் இருந்தால்
உலகம் பிழைக்கும் உண்மை..! -தரைமேல்-
-----------------