ஒரு நாள் !
அதிகாலை கண்முழிச்சு
அமைதியான நேரத்துல
அரவாசல் கூட்டி நானும்
அள்ளி தண்ணி தெளிச்சுப்புட்டன்!
பசு மாட்டு சாணிய நான்
பக்குவமா கரச்சு வந்து
பட்டும் படாம தெளிச்சு அங்க
பத்துப்புள்ளி கோலம் போட்டன்!
அடுப்பு மேல வச்ச தண்ணி
அந்த நேரம் கொதிச்சிருச்சு
அன்பு மச்சான் எழ முன்னம்
அவருக்கு கஹட்ட வேணும்!
காலம சாப்பிடணுமே
காக்கொத்து மாவிருக்கு
காஞ்ச கொச்சி சம்பல் போட்டு
காத்தால ரொட்டி சுட்டன்!
சுட்டுக்கிட்டு இருக்கயில
சுருக்கா வா தாயி
சுந்தரம் ஆத்தா கூப்பிட்டுச்சு
சுமன தொர தோட்டம் பொயிட்டாராம்!
ஐயையோ அந்த மனுசன்
ஐயாக்கிட்ட சொல்லிடுமே
ஐஞ்சு ரொட்டி சுட்டுப்புட்டன்
ஐர மீனு கொழம்பிருக்கு!
ஆச மச்சான் வயலுக்கு
ஆளெடுக்கப் போகணுமே
ஆடி ஓடி அலஞ்ச களை
ஆறு மணிக்கும் எழும்பலியே!
மச்சான எழுப்பி விட்டு
மணக்க ஒரு கஹட்ட குடுத்து
மதியத்துக்கு ஏதாச்சும்
மல்லிகா கடயில சாப்பிடுங்க!
அந்திக்கு சோறு வடிச்சு
அருத்தாப்பல் கறி வச்சு
அங்குலுவா சுட்டு தாரன்
அலஞ்சி கிட்டே சொல்லிப்புட்டன்!
காக்கட்டி சவுக்காரம்
காக்கய்யி வெத்தலயும்
காலயில சாப்பிடவும்
காலம் பாத்து எடுத்து வச்சன்!
உள்ளுக்கு காம்புறால
உஷாக்குட்டி தொட்டிலில
உண்மயில அஞ்சு மாசம்
உருண்டக்குட்டியா தானிருப்பா!
பெரட்டுக்கள ராசாத்தி
பெரப்பட்டு போயிருப்பா
பெறந்த நாளு மொதலா உஷா
பெரிய பெரட்டுக்கள வாரிசானா!
எல்லா வேலயும் முடிச்சுபுட்டு
எங்க தொர வர முந்தி
எம்புட்டு சுருக்கா வந்துப்புட்டன்
எனக்கு ரொம்ப மலப்புத்தான்!
ஒரு வாயி வெத்தலயும்
ஒடல் முழுக்க சவுக்காரமும்
ஒரு வழியா வேலக்கி வந்த
ஒருத்தியா நா மாறிப்புட்டன்!
கொழுந்தெடுக்க கூடயோட
கொழுந்தியாளும் வந்து நின்னா
கொள்ளிவாயன் வர முன்னம்
கொடஞ்ச மல போயி நின்னம்!
பச்சத் தேயில கொழுந்து புள்ள
பக்குவமா வளந்திருக்கா
பருவமக அவ எழும்பி
பல்லக்காட்டி இளிச்சுப்புட்டா!
இருந்துக்கடி இந்தா வாறம்
இளிக்கிற நீ அழுதிருவ
இருக்கிற கொழுப்பு கரைக்க
இன்னக்கி வந்திருக்கம்!
உச்சி வெயில் மண்டயில
உள்ள முடி பொசுக்கயில
உக்காந்து நாங்க கொஞ்சம்
உளறிக்கிட்டே சாப்பிட்டம்!
மறுக்காவும் கூடயோட
மணி ஒன்னுக்கு போனோமுங்க
மத்தவங்க கத பேசி
மனசொடச்சி போனாங்க!
என்வேல நா முடிச்சு
எந்திரிச்ச உஷாவோட
எங்க வீடு வந்தேனுங்க
எல்லா வேலயும் முடிக்கணுமே!
பணிய சிமிந்தி கெணறு போயி
பத்து வாளி மொண்டு குளிச்சன்
பச்ச கொழந்த அழ முன்னம்
பறந்து நானும் ஓடி வந்தன்
வரயில நா சந்தயில
வலக்கருவாடு வாங்கியாந்தன்
வறுத்து அத வச்சுப்புட்டா
வயிறு நெறய சாப்புடலாம்!
சுடுசோறு வடிச்சிருக்கன்
சுண்டங்கா கொழம்பு வச்சன்
சுட்ட கருவாடிருக்கு
சுருக்கா நீ வா மச்சான்!
ஆறு மணி ஆகயில
ஆச மச்சான் வந்துருச்சி
ஆத்துக்கு போய் குளிச்சு
ஆளு சோக்கா மாறிருச்சி!
பாசத்தோட நா வந்து
பாதி தல தொவட்டயில
பாத்திருந்த மாமா எனக்கு
பாச முத்தம் பதிச்சிருச்சு!
நாள் முழுக்க களச்சு அது
நா வரண்டு வந்துருக்கும்
நாலு வாயி கஹட்ட தண்ணி
நா கொண்டு தந்தேங்க!
சாப்பாடு ஆற முன்னம்
சாப்பிடு மாமா எண்டு சொல்ல
சாரத்தயும் மடிச்சுக்கட்டி
சாலக்குள்ள வந்திருச்சி!
உஷாக்குட்டி தூங்கிருச்சா
உரிமயோட கேட்டிருச்சி
உக்காந்து எலய போட்டு
உள்ளதெல்லாம் சாப்பிட்டுச்சி!
எலயில கொஞ்ச சோத்த
எனக்காக வச்சுப்புட்டு
என் மாமா எழுந்திரிக்க
எடுத்து வச்சி சாப்பிட்டன்!
முத்தத்து நிலாவொளிய
முதமொறயா பாக்குறாப்ப
முட்டக்கண்ணால பாத்துக்கிட்டே
முருகாயி என்டிச்சு!
வரேன் மச்சான் எண்டு நானும்
வண்டாக பறந்து போயி
வறந்தால நிக்கயில
வந்திருச்சு என் பக்கம்!
இன்னக்கி பாசம் ரொம்ப
இருக்குக்குறாப்ப தோணயில
இருட்டிருச்சி ரொம்ப புள்ள
இந்த பாய போட்டு தாயன்!
நானும் பாய எடுத்து வந்து
நாலு ஒதறு ஒதறிப்புட்டு
நாத்தெசயில கெழக்கு தெச
நா பாய போட்டுப்புட்டன்!
குடிக்க ஒரு சொம்புத்தண்ணி
குடுவயில வச்சிப்புட்டு
குப்பிலாம்ப அணச்சி நானும்
கும்பிட்டன் ஐயனார!
பாயினில சாஞ்சு நானும்
பாதி ஒடம்ப ஒருக்கழிச்சு
பாக்கயில மாமா மொகம்
பாசத்தோட என்னப் பாக்க!
என்ன மச்சன் புதுசா பாக்குற
எண்டு நானும் கேக்கயில
எம்புட்டு வேல புள்ள
எந்த நாளும் செய்யுறியே!
அன்னக்கி ரொம்பத்தான்
அலட்டிக்கிது என்மாமன்
அன்போட என்ன இறுக்கி
அணச்சிக்கிட்டே தூங்கிருச்சி!
எம்புட்டு கஸ்டம் தான்
என்ன தேடி வந்தாலும்
என் மச்சான் பாசத்தால
எனக்கு அது கடுகாகும்!
கண்ணு மணி கலங்கி ஒரு
கரிச துளி வந்திருச்சி
கண்ண சொக்க நானும் படுத்தன்
கங்காணி நாளக்கி வரசொன்னாரு!
_____
எத்தனை வருடங்கள் ஆகினாலும் இதே காலச்சக்கரத்தில் உழன்று கொண்டிருக்கும் தோட்டத் தொழிலாளிகள் அனைவருக்கும் அடியாளின் சிறு காணிக்கை!
என்று தான் அவர்களின் இந்த நிலை மாறி சொகுசு வாழ்க்கை வரப்போகிறதோ என்ற ஏக்கத்தில் தவிக்கும் ஒரு குரல் – ரா. அச்சலா.