உள்ளம் கொள்ளை கொண்டது !

மென்மலர்கள் தூங்கும்போது
மின்னல்வெட்டுது - மழை
மேகம்வந்து சோவெனவே
தூறிக்கொட்டுது
புன்னகையில் காணும்மனம்
பொங்கி முட்டுது -ஆழி
போகும் ஆறுபோலப் பொங்கி
மண்ணைத் தொட்டது

என்நினைவில் என்னவந்து
மெல்லத் தட்டுது - எண்ணம்
எத்தனையோ காலம்பின்னென்
றென்னைத் தள்ளுது
அன்னைகையில் தூங்கியெழும்
ஆசைபொங்குது - அவள்
அள்ளி யென்னைக் கட்டிக்கொஞ்சும்
பாசம் வேண்டுது

இன்னி சைக்கும் தெய்வ ராகம்
இச்சைகூட்டுது - கோவில்
ஏற்றும் தீபத்தோடு காட்சி
உள்ளே தோன்றுது
சின்னக்குருவி குஞ்சின் கொஞ்சல்
கிளையில் கேட்குது - அன்று
சேர்ந்துநின்ற கோழி, குஞ்சின்
மென்மை எண்ணுது

பின்னி வைத்தகூந்தல் வண்ணம்
மேகம் பூசுது - போகப்
பின்னிருந்து மின்னித்தார
கைகண் காட்டுது
அன்னம் ஓடைநீரில் நீந்த
லாகவெண்ணிலா - காண
அன்னை கையில் தந்த அன்னம்
எண்ணத் தோன்றுது

தென்னை பின் னிருந்து திங்கள்
தேய்ந்து காயுது - அது
தென்றலுக்குக் கண்சிமிட்டித்
தேனை வார்க்குது
முன்னிருந்த கோலமென்னைக்
கண்டதாமது - இன்று
மேனியெங்கும் ஞாபகத்தை
ஊற்றிவேகுது

வன்மையென்று வாசல்வந்த
வாழ்வின் எல்லையும் - அன்று
வானிருந்து கண்டவெண்ணி
லாவின் கண்ணிது
என்ன வாழ்வு இன்பமோ என்
றென்னைக் கேட்குது - என்றும்
இல்லமில்லமாக வந்து
எட்டிப் பார்த்தது


சில்லென்றூதி ஓடுமிளங்
காற்றில் சேர்ந்ததாய் - விதி
செல்லென் றென்னை தள்ளிச்
சேற்றில் வீழ்த்த நின்றது
இல்லையென்று போனதென்ன
ஏனோ என்குது - வாழ்வில்
இருந்திருக்க வேண்டுமென்று
தீயை மூட்டுது

கல்லெடுத்து என்திசைக்குக்
காற்றில் போட்டது - அது
காலடியில் பூக்களாக்கிக்
காலம் வென்றது
நல்லதென்று கொள்ளும் வாழ்வில்
நாலும்செய்தது - அங்கு
நன்மை யென்று சக்திரூப
நாதம் கேட்குது


சின்னப்பூக்கள் கண்மலர்ந்து
நின்றதோஅங்கு. - காலை
செம்மைவானச் சுடர் எழுந்த
போதுளம் கொண்டு
என்நினைந்தோ வெய்யில் தன்னை
வேண்டிநின்றது - சூடு
என்பதென்ன சுட்டபோது
வாடி நின்றது

அந்திநேரமாகித் தென்றல்
ஆடிவந்தது - நின்று
ஆடும்பூவின் வாசம்தன்னை
யள்ளிச் சென்றது
செந்தணலென் றானவானம்
சில்லென்றானது - கதிர்
சின்னப்பூக்கள் மீதுமஞ்சள்
வண்ணம் போர்த்தது

எழுதியவர் : கிரிகாசன் (22-Sep-12, 5:14 am)
பார்வை : 152

மேலே