[341 ] வருத்தங்கள் கரைத்திடுவீர்!
ஆடிக் களித்த
ஆனைமுகன் பக்தரெலாம்
கூடிக் கரைத்தனர்!
கொண்டாடி முடித்தனர்!
நாடிக் கரைந்த
நல்லுள்ளம் கொண்டவர்கள்
பாடி நடந்தவராய்ப்
பக்தியில் கரைந்தவராய்,
சோடித்த எல்லாமும்
சொந்தமென நிலைக்காது,
வேடிக்கை விளையாட்டாய்
வினைமுடிந்து மறையும்எனப்
பாடிக்கொண் டிருக்கின்ற
பரந்தகடல் இயற்கைக்குள்
தேடிச் சென்றே கொடுத்துத்
திருப்தியுடன் திரும்பினரே!
சொடிப்பில் மயங்காதீர்!
சொந்தங்கள் மறுக்காதீர்!
மூடிக்கொண் டிருக்கின்ற
மோகங்கள் மூள்கடிப்பீர்!
ஊடிக்கொண் டிருக்காதீர்!
உள்ளம்கல் லாகாதீர்!
வாடிக்கை இதுவாழ்க்கை!
வருத்தங்கள் கரைத்திடுவீர்!
கூடிச் சிறந்திடுவீர்!
குறையின்றி வாழ்ந்திடுவீர்!
-௦-