வாழ்க்கை அழகானது

முன்னுரை :
இயன்ற அளவு போராடலாம் என்ற ஒரு பழமையான ஆனால் என்றும் இளம் சித்தாந்தத்தை சீர்படுத்த மறுத்து, சாதாரண சங்கடத்திற்கும் தன இயலும் திறனை குறைத்து, வாழ்வை முடிக்க முற்படும் எண்ணற்ற இதயங்களுக்கு, வாழ்க்கையின் அழகான பக்கங்களை இதமாக புரட்டி எழுச்சி காண வைக்க ஒரு சிறிய நோக்கமே இக்கட்டுரையின் நோக்கம்.


தற்கொலை - ஒரு கொடிய முடிவு:

சூழ்நிலைகளை சமாளிக்க இயலா ஒருவன், சந்தர்ப்பங்களை சாதகமாக்க தெரியாத ஒருவன் உடனடியாக தீர்வு காண முற்படும் விளைவே இந்த தற்கொலை. விலைமதிப்பில்லா மனித உயிர்கள் மகத்துவம் அறியாமல் மரணம் தழுவும் இந்த சூழ்நிலை மிகக்கொடியது. வளர்ச்சியும் முதிர்ச்சியும் கண்ட பிறகும் கூட தன உயிரை மாய்த்துக்கொள்ள துணியும் இக்கொடூர நிகழ்வுக்கு மனிதாபிமான அடிப்படையில் நிரந்தர முற்றுப்புள்ளி இடுவது நம் கடமை.


தற்கொலைக்கான காரணிகள் :

பொதுவாக வாலிபப்பருவத்தில் முழு வளர்ச்சி பெறும் முன்பு இது போன்ற எண்ணங்களால் பெரிதும் மதிக்கப்படுவோர் இளைஞர்களே!! மனஅழுத்தம் என்பது ஒருவிதமான நோயாக ஆட்டுவிக்க, தனக்குத்தானே தன்னுடைய திறனை வரையறுத்து தீர்க்கமாக இந்த தற்கொலை முடிவிற்குத் தள்ளப்படுகிறார்கள். குறிப்பிட்ட சில காரணங்களாக வரைமுறைப்படுத்த இயலாவிடினும் பெரும்பாலும் இளம்வயதின் தாக்கங்களான காதல் தோல்வி, தேர்வில் தோல்வி, பெற்றோர் கண்டிப்பு, தவறான உறவு மற்றும் பழக்கங்கள், மேலும் சில இது போன்ற காரணங்களே தற்கொலைக்கு தூண்டுகோலாக அமைகின்றன.


தடுக்கும் வழிமுறைகள் :

இளம்பிராயத்தில் அவர்களது நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். இது பெற்றோர் மட்டுமல்லாது சுற்றத்தாரும் ஆராய்ந்து அறிய வேண்டிய கட்டாயமான விஷயம் ஆகும். கல்விநிறுவனங்கள் இதற்காக சிறப்பு ஆலோசகர்களை நியமித்து அதற்க்கான வழிமுறைகளை கையாளும்பட்சத்தில் நல்ல தீர்வு கிடைக்கும்.


அழகான வாழ்க்கை:

இன்பமும் துன்பமும் சரியாக கலந்து கிடக்கும் கலவைதான் வாழ்க்கை என்பதை வாலிபப்பருவத்தினர் புரிந்துகொள்ள முயற்சிகள் மேற்கொள்ளுதல் முக்கியம். சான்றாக, பல உதாரணங்களை அவர்களுக்கு புரியவைப்பதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். பறவைகளோ, விலங்குகளோ கூட தன உயிரை மாய்க்கும் முடிவை தானாக எடுப்பதில்லை. ஆறறிவு கொண்ட மனிதன் மட்டுமே இதுபோன்ற அதிரடி முடிவுக்கு ஆட்படுகிறான். போராடும் வரை மட்டுமே மனிதன் என்பது எழுதப்படாத விதி. இதனை சோதனை எனக்கருதாவண்ணம், அச்சோதனைகளை கூட சாதனையாக்கத் துணியும் வண்ணம் இரும்பு இதயமாக உருமாற்றும் வல்லமை சுற்றத்தார்க்கு இருப்பது அவசியம். அதன் மூலம் இளம்பருவத்தினர் இயலாமை உணர்ச்சியினை முறியடிக்க முற்படலாம். வாழ்க்கையின் அழகான நிகழ்வுகளை ஆதாரமாக அளிக்கும் பட்சத்தில் இது போன்ற கொடிய முடிவுகள் தடுக்கப்படலாம்.


முடிவுரை:

மனித உயிர்கள் மகத்தானது. இந்த மண்ணில் மனிதர்களாய் அவதரித்த ஒவ்வொரு உயிரும் வாழும் காலத்தில் எதிர்கொள்ளும் எந்த ஒரு இடர்ப்பாடு கூட எழிதாக மாற்றும் வண்ணம் நெஞ்சுறுதி கொள்ள ஆற்றல் வேண்டும். அதற்கான சூழ்நிலையை உருவாக்கித்தர வேண்டியது சமூக ஆர்வலர்களின் கடமையாகும். வளரும் காலகட்டங்களில் வாழ்வின் கஷ்டங்களையும் துன்பங்களையும் கனிவுடனே உணர வைக்க வேண்டும். இது போன்ற முயற்சிகளால் தற்கொலை எனும் கொடிய விஷத்தினை அழிக்கும் முயற்சியில் வெற்றி பெறுவது உறுதியாகும். தன்னம்பிக்கை எனும் விதையினை ஒவ்வொரு மனிதனின் இதயத்தில் ஊன்றி வைக்க அது விருட்ச்ச்சமாகும் பட்சத்தில் இந்தத் தற்கொலை எனும் ஆயுதம் தவிடுபொடியாகும் என்பதில் ஐயமில்லை

எழுதியவர் : "கமுதிக்கவி" சௌ.முத்துராஜ (25-Sep-12, 5:51 pm)
சேர்த்தது : MUTHURAJA
பார்வை : 479

மேலே