22.ஆதலினால் காதலித்தேன்.! பொள்ளாச்சி அபி..

கனவைப் பழக
கவிதைகள் பழகினேன்
கவலையை பழக - மீண்டும்
காதலையே பழகினேன்-
---------ஹரிஹர நாராயணன்------
இத்திட்டத்தில் ஏதாவது வில்லங்கம் வரும் என்று முருகேசன் பயந்திருப்பான் போலும்.., “பரவாயில்லை பார்த்துக் கொள்ளலாம்” என்று கூறிவிட்டு,அத்திட்டத்தை செயல்படுத்தினோம்.
ஆனால்,அதன் எதிர்விளைவு..?.
முதலில்,எனது..அல்ல,இப்போது எங்களது திட்டம் என்னவென்பதைச் சொல்லிவிடுகிறேன்.
புத்தாண்டு தினத்தையடுத்து,ஜனவரி.2.ஆம் தேதி,வேலைக்குவரும் பெண்கள் அனைவரும் அவரவர் இருக்கையில் அமரும்போதே, அசந்து விடவேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்.
இதற்காகவே கடைவீதிக்குச் சென்று,அஞ்சல் அட்டை அளவுள்ள,வண்ண அட்டைகளை வாங்கினோம்.அதில் பல்வேறு வண்ணங்களாலான சிறுபாசிக் கொத்துகளையும்,பட்டு வண்ணங்களில் மினுமினுக்கும் இறக்கைகளையும் வாங்கி தனித்தனியே அந்த அட்டைகளின் வலது மூலையில் இணைத்தோம்.இப்போது அந்த அட்டையில் எனது எதிர்பார்ப்புப்படியே ஒரு சிறு கவிதை எழுதும் அளவிற்கு இடம் இருந்தது.
முன்னமே ஒவ்வொரு பெண்ணின் பொதுவான குணாதிசயங்கள் குறித்தும் முருகேசனிடம் நான் கேட்டுவைத்திருந்தேன்.அதனை மனதிலிருத்திக் கொண்டு,அவரவர்கேற்றபடி,ஒவ்வொரு அட்டையிலும்,
பார்வையில் வெறுப்போ..,
பழகியதில் சலிப்போ..,
பண்புகளை அறியுமுன்னே
பட்டுவிடுவதா நட்பு..?..,
---------
என்னைக்குறித்த
அறிமுகம் உனக்குள்
உண்டென்பது
முன்பே அறிந்திருந்தால்..,
கடந்துபோன காலங்களை
சபித்திருக்க மாட்டேன் தோழி..!
---------------
இதேபோல் குட்டிக்குட்டி கவிதைகளாய் எழுதினேன்.முடிவில் எங்கள் இருவரின் பெயரையும் எழுதிக்கொண்டோம்.இப்போது நாங்களே தயாரித்த,எங்கள் உழைப்பில் விளைந்த வாழ்த்து அட்டைகள் தயாராகிவிட்டன.அழகாய் இருப்பதாய்த்தான் பட்டது. ஆனாலும்,அந்த வாழ்த்துஅட்டை இன்னும் முழுமையடையாமல் ஏதோ ஒரு குறையிருப்பதாகவே எனக்குத் தோன்றியது.என்னஅது..? என்னஅது..?
முடிவுக்கு வரமுடியாமல் முருகேசனிடமும் கேட்டேன். “எப்படியப்பா இருக்கிறது.?”, அவனோ, “எனக்கு மிகத் திருப்தியாயிருக்கிறது. அவரவர்க்கேற்றபடி இதில் எழுதப்பட்ட கவிதைகளைப் பார்த்தவுடனே,அவர்கள் அசரப்போவது நிச்சயம்”என்று அதீத நம்பிக்கை தெரிவித்தான்.ஆனாலும் எனக்கு மனதிற்குள் சமாதானம் ஏற்படவில்லை.பெண்களுக்கு அளிக்கப்படும் வாழ்த்து அட்டைகள்..இதில் எதையும் தவறாகப் புரிந்துகொண்டு சிக்கலும் ஏற்படக்கூடாது அல்லவா..?.அவர்கள் இதைக்கண்டவுடன்,அங்கீகரித்துவிட்ட அடையாளம் ஏதாவது நமக்குப் புரிவதுபோல ஏற்பாடு செய்யவேண்டும்.என்ன செய்யலாம்.?
அப்போதுதான் மின்னல் வெட்டியதைப்போல ஒரு உபாயம் தோன்றியது.அத்தனை அட்டைகளிலும் பலவண்ணங்களில் கிடைக்கும் ஊட்டி ரோஜாக் களை வாங்கிப் பொருத்தினால் என்ன.?.உடனே முருகேசனிடம் சொன்னேன்.அவன் குதியாட்டம் போட்டுக்கொண்டு உடனே அங்கீகரித்தான். அதன்படி ரோஜாக்களை வாங்கிப் பொருத்தினோம். அவற்றை எப்படி தலையில் வைத்துக் கொள்வார்கள். அதற்காக அழகான வேலைப்பாடுகள் அமைந்த பல ஹேர்பின் களையும் வாங்கி அந்தந்த அட்டையில் ரோஜாப்பூக்களுடனே இணைத்தோம். அப்பாடா..,வாழ்த்து அட்டைகளில் இப்போது எந்தக் குறையும் இல்லை.நிம்மதியாய் உணர்ந்தேன்.
இனி நாளை காலையில்,கம்பெனியில் பணியாற்றும் பெண்களிடமிருந்து வெளிப்படப் போகும் எதிர்வினை என்னவாயிருக்கும்..?
எதுவாயிருந்தாலும் சமாளிக்கத்தான் வேண்டும்.பார்த்துக் கொள்ளலாம்.பாதிக்கிணறு தாண்டியதும் பதறினால் எப்படி.?.காரியம் சிதறிவிடுமே.! மீதிக்கிணற்றையும் தாண்டியே ஆகவேண்டும்.நெருக்கடியான பரிட்சையே போல் இருந்தது அந்தச்சூழ்நிலை.!
எங்கள் திட்டத்தின் இறுதிக்கட்டமாக,கம்பெனிக்கு முன்னமே போய்,அவரவர் பெயர் எழுதப்பட்ட வாழ்த்துஅட்டைகளை,அவரவர் இருக்கையில் வைத்துவிடவேண்டும்.அவர்கள் உள்ளே வந்தவுடன் பார்வையில் முதலில் படும்படியாக அது இருக்கவேண்டும்.
இருவரும் அதுகுறித்து பேசிவைத்துக் கொண்டு உறங்கச் சென்றோம்.
வாழ்த்து அட்டைகள் அனைத்தும் முருகேசன் பொறுப்பிலேயே இருந்தது.
வழக்கப்படி,கம்பெனிக்கு வேலைக்குச் செல்லும் போது, நண்பர்கள் யாரும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை.வேலைக்கு தாமதமாகச் சென்றுவிடக்கூடாது என்பதால்,கிடைக்கும் பேருந்தில் ஏறிச்சென்று விடுவோம். மாலையில் தான் ஒன்றாக வீடு திரும்புவோம்.
மறுநாள் காலை விடிந்தது.வழக்கம்போல நானும் வேலைக்காகக் கிளம்பிக் கொண்டிருந்தேன். பேருந்து நிலையத்திற்கு வரும்போதே..நான் வழக்கமாகச் செல்லும் பேருந்து கிளம்பிச் சென்று கொண்டிருந்தது.ஓடிச்சென்றும் பிடிக்கமுடியாத தொலைவுக்கு சென்றுவிட்டதால் எனது முயற்சியைக் கைவிட்டேன்.இனி இருபது நிமிடங்கள் கழித்துத்தான் அடுத்தபேருந்து. காத்திருக்கத்தான் வேண்டும்.
எனக்கோ,முருகேசன் முன்னதாகவே சென்றிருப்பானா..? திட்டப்படி எல்லாம் சரியாக செய்திருப்பானா..? கம்பெனியில் என்ன நடக்குமோ..? பெண்கள் எப்படி எதிர்வினை புரிவார்கள்..? கேள்விகள் குடைந்து கொண்டிருந்த தின் விளைவாக,மனது அலைபாய்ந்து கொண்டிருந்தது. பேருந்து நிலையத்தில் நிற்க முடியாமல் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந் தேன்.காத்திருக்கும் ஒவ்வொரு நிமிடமும், மணிக்கணக்கில் நீள்வதாய்ப் பட்டது.
அந்த அவஸ்தைக்கு முற்றுப்புள்ளியாய் அடுத்த பேருந்து வருவதும் தெரிந்தது.
இறங்கவேண்டிய நிறுத்தத்தில் தாவி இறங்கினேன். கம்பெனியில் என்ன நடந்திருக்கும் என்று அறிந்து கொள்ளவிருந்த ஆவலில் நடையை எட்டிப்போட்டேன்.மேலும்,வேலைக்கான தாமதம் ஆகிவிட்டதெனில்,சூபர்வைசர் வேறு முறைப்பார். அதிகமாக சலித்துக் கொண்டால், இன்று விடுமுறை எடுத்துக் கொள்கிறேன்.அதைச் சொல்லிவிட்டுப் போவதற்காகத்தான் வந்தேன் என்றுகூறி சமாளித்துக் கொள்ளலாம் என்றும் மனதிற்குள் திட்டமிருந்தது.
நெருங்கிவிட்டேன்.கம்பெனிக்கு வெளியில் எப்போதும்போல அமைதியாகத்தான் இருந்தது. அப்பாடா ! எந்த ஆரவாரமும் இல்லையென்பதால் விவகாரம் வேறுமாதிரி எதுவும் வெடிக்கவில்லை யென்று தெரிந்தது.வழக்கம்போல,கம்பெனியின் உடைமாற்றும் அறைக்குள் சென்று,வேலைக்கான உடைகளை அணிந்து கொண்டு,எனது இயந்திரத்திற்கு வந்தேன்.சூபர்வைசர் முன்னால் இல்லை.ஒருவேளை அவரது அறைக்குள் இருப்பாரோ.? முருகேசனையும் காணவில்லை.எங்கே தொலைந்தான் இவன்.? திட்டப்படி எல்லாம் நடந்ததா.?.
முருகேசன் எங்கே..?.அடுத்த தடுப்பிற்குப் பின் இருந்த காயல்வைண்டிங் பிரிவில் ஒருவரைக் கேட்டேன்.ஜான்சனும்,முருகேசனும் ஸ்டோர் ரூமிற்குப் போயிருக்கிறார்கள் என்று பதில் வந்தது.இயந்திரத்தின் மீது மேலாக ஒட்டியிருந்த தூசியைத் துடைத்து,அது லகுவாக இயங்குவ தற்காக கொஞ்சம் மசகு எண்ணையையும் வார்த்துவிட்டு, மின்விநியோகம்-வோல்ட்டேஜ்-சரியாக இருக்கிறதா..? என்று சோதித்துக் கொள்வதற்காக,இயந்திரத்தை ஒருமுறை இயக்கி நிறுத்தினேன்.அந்த சப்தம் பெண்கள் பணியாற்றும் பகுதிவரை கேட்டிருக்கவேண்டும்.
அடுத்த விநாடி..,பெண்கள் பகுதியிலிருந்து யாரோ ஒருவர் வெளியே வருவது போல் தெரிந்தது. வழக்கம்போல எனது பார்வையைத் தாழ்த்திக் கொண்டு.இயந்திரத்தில் வேலைசெய்யவேண்டிய உதிரிபாகம் ஒன்றை மாட்டுவதில் குறியாய இருந்தேன்.
அப்போதுதான்.. எனது இயந்திரத்திற்கு முன்பாக ஏதோ அடர்த்தியான நிழல் ஆடுவதாக உணர்ந்து நிமிர்ந்த விநாடி,ஷெர்லி அக்கா, கிரேஸி,பெண்கள் பகுதி சூபர்வைசர் சுலோச்சனா, சுமதி, ரேணுகா, விஜயலட்சுமி,பிரேமா,உஷா,கலாவதி என இன்னுமுள்ள அத்தனை பெண்களும் ஒரேகுரலில்,“விஷ் யூ ஹேப்பி நியுஇயர்” என்று சொன்னபடி நின்றிருந்தார்கள்.அத்தனை பேரின் தலையிலும் ஊட்டி ரோஜாக்கள் அழகாய் சிரித்துக் கொண்டிருந்தன..!
ஆதலினால் காதலித்தேன்.! மீண்டும் தொடர்கிறேன்..!.
----------------------------------