காணவில்லை காந்தி....

சாலையில் கிடந்தன;
மூக்குகண்ணாடி,ஒரு கடிகாரம்
ஒரு கைத்தடி......
காணவில்லை காந்தியை!!!!
நாணவில்லை எவரும் அதற்காக !

ஒரு குழந்தையின்
கைகளில் மூக்குகண்ணாடி:
"என் கண்ணாடி உங்கள் பார்வைக்கு-
ஓட்டுப்போடாத நாட்களிலும்
அரிசனங்களை சரிசமமாக நடத்திட
துல்லிய திட்டங்கள் தீட்டிட ....."

இளைஞன் ஒருவன்
கரங்களில் கைத்தடி:
"ஊழலை தேசியமயமாக்கிய
ஊளையிடும் நரிகளின்
எலும்பொடைக்க......."

இளம் பெண் ஒருத்தி
கைகளில் இப்போது கடிகாரம்:
"வீண் விழாக்கள் நிகழ்த்தி
காலத்தை விரயமாக்காமல் இருந்திட...."

காந்தியின் முக தரிசனம் தேடினர் :

ஒரு வழியாய் காந்தி
கண்டெடுக்கப்பட்டார்-ஆனால்,
முகம் இல்லை,
பாதங்களும் காணவில்லை:
"நகங்கள் விரல்களோடு
யுத்தம் புரிவதை நிறுத்துங்கள்.-
என் விழிகளின் கனவுகள்
இன்று கானலாகிவிட்டன,
என் பாதங்கள் சென்ற பாதையெல்லாம்
இன்று பாவங்கள்!
பூமிச்சுற்று நிற்கும் முன்
நிமிர முயலுங்கள்-
மீண்டும் தரிசனமாகி
பாதம் பதிப்பேன்
தரிசனம் முழுமையாய்
தருகிறேன் ..."

பூகோள முகங்களின்
மூக்குகளில்
முளைத்தன விரல்கள்-
"என்னவாயிற்று இந்தியாவுக்கு....
பதுக்கப்பட்ட கருப்பு பணம்
முழுமையாக அரசுக்கு வந்துள்ளதாம்,
நாடாளுமன்றம்
கூச்சல்.ஒத்திவைப்பு இன்றி
முறையாக நடக்கிறதாம்,
அந்தந்த இன மக்களின்
உரிமை சொந்த நாட்டிலும்
அயல் நாட்டிலும் கூட
மீட்டெடுக்கப்படுகிறதாம்....
(வாசகர்கள் தத்தம் கனவுகளைத் தொடர்ந்து எழுதி இன்புறுக-எழுத்திலாவது.... )

எழுதியவர் : (1-Oct-12, 11:39 pm)
பார்வை : 207

மேலே