சூடு வைக்கப் பட்ட மலர் மொட்டுக்கள்

சாக்கடை புழுவென சந்தோஷ தேகங்கள்
சகதியில் புரண்டிட குப்பைத் தொட்டிக்குள்
கருவென வளர்ந்து கொசுக்கடியில்
கொட்டப் பட்டேன் எச்சில் இலை நடுவே
குருதி துடைக்க நேரமின்றி
கொடுமைப் பேயவள் மீண்டும்
கொண்டாட்டமாய் முந்தானை விரித்திருப்பாள் - தெருக் கோடியில் முன்னூறு ரூபாய்க்கு முழுதாக.....!

அனாதையாய் திரிகிறேன்.....
அப்பன் பேரு குப்பனோ சுப்பனோ.....நானறியேன்...!

கண்டெடுத்த கபோதி என்னை
பிச்சை எடுக்க வைத்தே அவன் பிழைத்தான்....!

அவனே இப்போதைக்கு அப்பனும் ஆத்தாளும் எனக்கு.......!

பச்சை குழந்தை என்னை இப்போதே
படு குழியில் தள்ளுகிறான்

பருவம் வந்த பின்பு என்னை
பாவி அவன் என்ன செய்வான் ?

தென்றல் காற்று என் பசி வயிற்றை
தேள் கொடுக்காய் கொட்டுகிறது.....

கண்ணீர் வழிவதை கொதிக்கும்
கதிரவனே நீ காய வைத்து விடு......!

பார்க்கும் பார்வைகள் கற்பை அழிக்குது
பாவி என் தேகமும் கூசி குறுகுது

நாற்றம் பிடித்த மனங்களுக்கு
நறுமண சந்தனமே சாக்கடைகளும்....

பிச்சை காரிகளும் இருட்டில் காமப்
பித்து பிடிக்க வைக்கும் சுந்தரிகள்......

எதிர்கால இருட்டு பயம் என் கழுத்தில்
சுருக்குக் கயிறென இறுக்குகிறது.....!

பெரியவள் ஆவதற்கு முன் - இறைவா
என் உயிரை எடுத்து விடு.......

இன்னும் கிழி பட என்னால் முடியாது.......!

எழுதியவர் : (14-Oct-12, 4:33 pm)
பார்வை : 163

மேலே