நிரம்பி வழிகின்றன....
நிரம்பி வழிகின்றன
உணவு விடுதி மேஜைகள்
வித விதமான
ஆடைகளோடும்
அணிகலன்களோடும்
ஆண்களும் பெண்களும்
யுவதிகளும் கிழவிகளுமாய்
உணவினை
சுவைத்துக்கொண்டும்
ஆர்டர் இட்டுக்கொண்டுமாய்
நிரம்பி வழிகின்றன மேஜைகள்
உணவுக்கு ஆர்டர் கொடுத்து
உண்ணும் போதும்
உண்டு முடித்த பின்பும்
எக்மோர் ரெயில்
நிலையத்தில் கேட்ட குரல்
ஒலித்துக்கொண்டேயிருக்கிறது
காதுகளில் விடாது
நான் பெத்த பிள்ளைகளா
நான் சாப்பிட
ஒத்த ரூபா போடுங்க ராசா
என்னும் அந்தக்குரலுக்கு
செவிமடுக்காது
தாண்டி வந்த பின்பும்
ஒலித்துக்கொண்டேயிருக்கிறது
விடாது அந்தக்குரல்
நிரம்பி வழிகின்றன
உணவு விடுதி மேஜைகள்
ஏற்றத் தாழ்வைப்
பார்த்துக்கொண்டே
கடந்து செல்லும்
அரசியல்வாதி போலவே
இல்லாக் கொடுமையும்
இருப்பவனின் ஊதாரித்தனமும்
ஏன் இந்நாட்டில் எனும்
கேள்விகளின்றி
சர்வருக்கு சில
நாணயங்களை வைத்துவிட்டு
நடந்து செல்கிறேன் நானும்....