புதிய நீதி சொல்லும் தேதி சொல்வோம்
நம்பிக்கை கொள்வோம்
நம் அரசியல் சட்டத்தின்
எல்லா வார்த்தைகளுக்கும்
ஆழமான அர்த்தம் உண்டு.
ஆனால்
அதை சத்தமாய்
உச்சரிக்கத்தான்
உச்சநீதிமன்றம் முதல்
உள்ளூர் நீதிமன்றம் வரை
அச்சப்படுகிறது அல்லது
கால அவகாசம்
கேட்க்கிறது.
சில நேரங்களில்
நீதி கேட்பது
யாசகம் கேட்பதைவிட
மோசமாய் தெரிகிறது.
காய்ந்த வயலுக்கு
தண்ணீர் கேட்டால்
கண்ணீர் வரும் வரை
காயவைக்கிறது- நம் சட்டம்.
காயும் பயிர்
சாகாதிருக்க. . .
குறைந்த பட்சம்
சாயாதிருக்க
ஒரு சட்டம் செய்ய
வழியுண்டா இங்கே?
சில்லரை வணிகத்திலும்
அந்நிய முதலீடா?
நம் கண்ணியத்திற்கு ஆகாது என்றால்
கொள்கை முடிவில்
குறுக்கிட முடியாது
என்று நம் சட்டம் சொல்கிறது.
எரி வாயு உருளையில்
ஆறுக்கு மேலே
மானியம் இல்லையாம்.
காவேரி ஆறுக்கு மேலும்
அதிகாரம் இல்லையாம்.
என்னடா அதிசய
ராஜாங்கம் இது?
ஏழையின் குரல்
என்ன ரகம்
எந்த ராகம்
என்று கேட்கிறது
ஒரு கூட்டம்
அட! தாய் வீடே எம்மை
தண்டிக்கலாமா?
தேசம் எங்கள் மூச்சு
என்று நம்பி கிடக்கிறோம்
தேசமே! நீயே ஒரு நீதி சொல்.
அல்லது
புதிய நீதி சொல்லும்
தேதி சொல்வோம் நாங்கள்