2 .அழகான தேவதை (சின்ட்ரெல்லா )
விழிகள் களைத்திட
விருப்பம் உடைந்திட
வீழ்ந்த கண்ணீர்த்துளிகள்
வீணாகிப் போகவில்லை.
அவளது அழுகுரல்
ஆற்றாமல் அங்கே
அன்னை வடிவிலொரு
அன்புத் தேவதை வந்தாள்!
மடியினில் வைத்து
மருகிடும் பெண்ணவளை
வருடியபடி வலிதீர்க்க
வழி செய்ய நினைத்தாள்!
மங்கையவள் மனம்
மகிழ்ந்திட செய்துவிட்டாள்.
மந்திரக் கோல் கொண்டு
மகத்துவம் புரிந்துவிட்டாள்!
இன்பம் பொங்கிட
இசையொன்று ஒலித்திட
இருண்டு போன கனவுகள்
இறகுகள் பூட்டியே நடனமாட,
அலங்கார தேர் ஒன்று
அசைந்தாடி அங்குவர
இருப்புக் கொள்ளாது
இருபுரவிகளும் துள்ளலிட,
இணையில்லா அழகியை
இளவரசியாய் மாற்றிவிட்டு
இன்முகத்தோடு அன்புமகளை
விருந்திற்கு அனுப்பிவைத்தாள்.
நாயகன் அத்தினத்தில்
நங்கையவளைக் காண
நல் தவம் புரிந்தானோ என
நானிலமும் வியந்துவிட ,
பெண்ணவளைக் கண்டதும்
எண்ணங்கள் நிரம்பியதோ
இவள்தான் வாழ்வினில்
இணையென்று தெரிந்ததோ!
சந்தித்த வேளையில்
சமிக்ஞைகள் அர்த்தமுற்று
சங்கமித்துவிட்ட காதலோடு
சந்தோஷ கீதங்கள் சேர்ந்திட ,
இணைந்தே நடனமாடி
இருவரும் களிப்புற்றுவிட்ட
காட்சிகள் காண்போரின்
கண்களில் காவியமாகிவிட ,
கதைகள் பேசிக்கொண்டே
காலமும் கழிந்து போக
கன்னியவளின் புத்தியில்
கணநேரத்தில் ஒரு மாற்றம்.
தாமதம் ஆகிவிட்டதாக
தன் இனியவனிடம் தயங்கியே
தன் மனம் விட்டுவிட்டு
தவிப்போடு விடைபெற்றாள் !!!
(தொடர்ச்சி மூன்றாம் படைப்பாக )