நான் வரிச் சாதி

மழையடித்து ஓய்ந்து போய்க் கிடக்கிறது
அடைக்கல நாடுகளில்,
நிசப்த வெள்ளத்தில்
மிதக்குமென் தாய்நிலத்து சிரிப்புகள் !

துளியளவும் மங்கல தோரணங்கள்
தொங்காத
மகிழ்வற்ற நீண்ட துயர வாழ்வில்
பெருமளவு
உயிரை சாவு பறித்துக் கொள்கிறது .

மீண்டும் மீண்டும்
பூக்கும் தமிழ்க் கருவில்
மீண்டும் மீண்டும்
தாக்குகிறது இனவெறி
விழ விழ எழுவதாய் எழுவோம்!

துயரம் பற்றியெழுதி தூர்க்க முடியவில்லை
மரணித்தும் புதைக்காமல்
விட்டு வந்த புதைகுழி உறவுகளின்
உயிர் போகும் கதறலை !

குயில்கள் கூவியழும்
என் குலமழிந்த
சேதி சொல்லி

பசுக்கள் கதறியழும்
என் தெருக்களின்
சாவு சொல்லி

அழுதென்ன ஆகும்?
அழாமலே . . .
காலம் பார்த்து
களம் புகுதல்
சாலச் சிறந்தது
என் தாய் மண்ணுக்கே சிறப்பது .!

நீளும் மவுன இடைவெளியில்
அந்நியரால்
கோவணத்தை பிடுங்கியும்
அம்மணத்துடன் குறிகளை அறுத்தெறிந்தும்
என் தாய் மண்ணின்
சந்ததி வாழ்விழக்குமெனில்
தயக்கம் கொள்வது
தமிழர் வழக்கமல்ல
களத்தில் முழங்குவோம்
காலம் பார்த்து இறங்குவோம் !

ஏய்ப்பவன் ஏய்ப்பதற்கு
எருமைக் கூட்டமல்ல
என் தமிழ்ச் சாதி . . .!

கொலைஞரை கொல்வதற்கு
காலம் நகர்த்தாது
நான் வரிச் சாதி . . .!

நேற்றும்,
இன்றும்,
விலங்கினை என் கரம்
ஏற்பது
அடிமை விலங்கினை உடைக்கவே தவிர
உன்
அடிமை விலங்காயிருக்கவல்ல .

எழுதியவர் : கவிஞர் அகரமுதல்வன் (19-Oct-12, 6:28 pm)
பார்வை : 305

மேலே