34.ஆதலினால் காதலித்தேன்..! அனைவருக்கும் நன்றி - பொள்ளாச்சி அபி

பரிசாக அவள் கால்களுக்கு
கொலுசிடுவதை விட
முழுசாக
ஒரு சிறகு செய்து கொடு.!.

----------------------தமிழ் தாசன்--------

இனி எங்கள் பகுதியில்,எனக்கான வேலை கிடைக்காது என்பது உறுதியாகி விட்டது. இனி அடுத்த கட்;டமாய் என்ன செய்வது.?.

வங்கியில் கடன்பெற்று ஒரு கடைசல் யந்திரம் வாங்கி தனியாகவே தொழில் துவங்க முடிவு செய்தேன்.அதற்கான முயற்சிகள் வெற்றி பெற்றது.இப்போது யாரிடமும் வேலைக்காக சென்று கையேந்த வேண்டிய நிலை இல்லை. உதிரி பாகங்கள் செய்து தருமாறு,வேறு பல நிறுவனங்கள் ஆர்டர்கள் கொடுத்தன.அதனைச் செய்து கொடுத்த தில்,வந்த வருமானம் வங்கிக் கடனை அடைக்கவும்,வாழ்க்கையை ஓட்டவும் போதுமானதாயிருந்தது.

இப்போது,எனக்கான,மற்றவருக்கான நேரங்களை திட்டமிடுவதும் சற்று சுலபமாக இருந்தது. இப்படியும்,ஒன்றரை வருடங்கள் வேகமாக ஓடிப்போனது.

இந்த நேரத்தில்தான்,பிரேமாவை பெண் பார்ப்பதற்காக வீட்டில் ஏற்பாடுகள் நடந்து வந்தது. இதுவே வீட்டில் காதலைச் சொல்ல சரியான நேரம்.கடைசி நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம், சமாளித்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட முடியாது.ஏனெனில்,பெண் பார்த்துவிட்டுச் சென்றபின் காதலைச் சொன்னால்,நம் வீடு மட்டுமல்ல,முகம் தெரியாத யாரோ ஒரு மணமகனும்,அவரது வீட்டாரும் பாதிக்கப்படக் கூடும்.

எனவே,வேறு வழியில்லாத நிலையில்,பிரேமா தனது பெற்றோரிடம்,என்னைக் காதலிப்பதாக வும்,அவரைத்தான் திருமணம் செய்வேன் என்றும் தெரிவிக்க., அவர்களுக்கு எல்லாப் பெற்றோரையும் போலவே அதிர்ச்சிதான். அவர்களுக்கு எனது குணம் குறித்தும்,பழக்கவழக்கங்கள் குறித்தும் நல்ல அபிப்ராயமே இருந்தது.

இந்தசமயம் வரை, எங்கள் மீது,சந்தேகப்படும்படி எந்த சம்பவமும் நடந்துவிடவில்லை என்பதால், என்னைக் காதலிப்பது குறித்து பிரேமா சொல்வது பொய்யாய் இருக்குமோ.? என்றுகூட அவர்கள் சந்தேகப்பட்டார்கள்.

இதன் விளைவு,பிரேமாவின் தாயார்,என்னைத் தேடி எனது பட்டறைக்கே வந்துவிட்டார்.திடீரென அவர் வந்ததில் எனக்கும் அதிர்ச்சிதான்.வரவேற்று அமரவைத்த பின், “என்ன விஷயம்.? என்று கேட்டபோது,பிரேமாவிற்கு திருமண ஏற்பாடுகள் செய்வதற்கான முயற்சியில் இருந்தோம். ஆனால்,உங்களைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று விடாப்பிடியாக சொல்கிறாள். இப்போது எங்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.நீங்கள் வந்து அவளுக்கு கொஞ்சம் புத்தி சொல்லி,அவள் மனதை மாற்ற வேண்டும்”

இதனை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.‘ஒரு தாயார் வந்து,எனக்கு இந்த உதவி வேண்டும் என்று கேட்கும்போது,நான் என்ன சொல்லி அதனை மறுக்க.?. நானும்தான் பிரேமாவைக் காதலிக்கிறேன் என்று இப்போதே சொல்லிவிடலாமா.? குழப்பத்தின் உச்சம் என் மூளையைக் குடைந்தது. நான்,மூர்ச்சித்து விழுந்துவிடப் போகிறேன் என்று தோன்றியது.

“அம்மா,நீங்கள் இப்போது வீட்டிற்குச் செல்லுங்கள்.நான் மாலையில் அங்கு வருகிறேன்.பிரேமாவிடமும் பேசலாம்.”; என்று சொல்லி,அவர்களை அனுப்பி வைத்தேன்.

அதற்குப்பின் மாலையில் அவர்கள் வீட்டிற்குச் சென்று எங்கள் நிலைகுறித்துப் பேசினேன். தங்களது சொந்தத்தில் மாப்பிள்ளை பார்த்து, திருமணம் செய்து வைப்பது மட்டுமே இந்த சமுதாயத்தில்,கௌரவமான விஷயம் என்பதால்,காதல் திருமணம் குறித்து அவர்கள் அச்சப்பட்டனர்.

“அந்த அச்சம் தேவையில்லை என்று பலவாறு விளக்கியும் அவர்கள் மனம் சமனப்படவில்லை. ”மேலும் யோசியுங்கள்,பிரேமாவிடமும் பேசுங்கள்.உங்கள் பெண்ணுக்கு எது நல்லது எனப் படுகிறதோ..,அதைச் செய்யட்டும். நான் இடையூறு செய்யமாட்டேன்” இந்த வார்த்தைகளை மிகவும் வேதனையுடன் சொல்லிவிட்டு அங்கிருந்து திரும்பினேன்.

அந்த இடத்தில் அதனை சொல்லவேண்டிய காரணமும் இருந்தது. ‘இதுவரை என்னைக் காதலித்த பெண்,தனது பெற்றோரின் தரப்பையும் நன்றாகக் கேட்கட்டும்.ஒருவேளை,பெற்றோர் பேசுவதிலிருந்து அவர்கள் சொல்வது தனக்கு சரியெனப் பட்டால்,அவர்கள் விருப்பப்படி திருமணம் செய்து கொள்ளட்டும். சந்தர்ப்ப சூழ்நிலைகளால்,வாழ்க்கை ஏதேனும் ஒரு விதத்தில் தடம்புரண்டு விட்டால்,அன்று பெற்றோர் சொன்னதையாவது கேட்டிருக்கலாம் என்று
பிரேமா எப்போதும் நினைத்து விடக்கூடாது.

பிரேமாவைப் பொருத்தவரை வாழ்வின் பாதையைத் தேந்தெடுக்கக் கிடைத்த மிக இறுதியான சந்தர்ப்பம்.அக்னிப்பரீட்சை போலத்தான்.., சொந்தமாய் முடிவை எடுக்கட்டும்.’

ஒருவேளை,பெற்றோரின் பேச்சுக்கு கட்டுப்பட்டு பிரேமா என்னுடனான காதலை முறித்துக் கொண்டால்..,எனது மனம் துன்புறும்தான். அதற்காக என்னோடு வாழ்ந்தே தீரவேண்டுமென இன்னொரு பெண்ணை வற்புறுத்தக் கூடாதல்லவா.?. காதல் தோல்வி என்பதும், வாழ்வின் ஒருபகுதிதானே..! எது நடக்குமோ நடக்கட்டும்.

இதற்குப்பிறகு,இரண்டுநாட்கள் கழித்து என்னைத் தேடி வந்த பிரேமா,”தங்கள் வீட்டில் யாரும் சமாதானம் அடையவில்லை.தொடர்ந்து அவர்கள் வழியில் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அது எல்லாருக்கும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதால், ஒரு நீண்ட கடிதம் எழுதிவைத்துவிட்டு வந்து விட்டேன்.இனி அங்கு திரும்பிப் போவதாயில்லை.” பிரேமா சொன்னபோது என்ன நடந்திருக்கும் என்று எனக்கும் யூகிக்க முடிந்தது.

இதற்குப்பின்,எங்கள் வீட்டிலும் எனது காதல் குறித்து தாய் தந்தையரிடம் சொல்லி,இந்தத் திருமணத்தை நடத்திவைக்க, கேட்டேன்.எனது தந்தையாருக்கு இதில் விருப்பம்தான்.ஆனால், எனது தாயாருக்கு, சொந்தபந்தங்கள் என்ன சொல்லும் என்ற அச்சமே மேலோங்கியிருந்தது.

“ஒரு வேளை உணவுக்குக் கூட வழியின்றி தவித்த காலத்தில்,எந்த சொந்தமும் வந்து உதவவில்லையே. புறம் பேசுவதும்,அச்சம் தெரிவிப்பதும் எல்லாருக்கும் வழக்கம்தான். ஆனால்,அவர்கள் அச்சத்தைப் போக்கும் வகையில் நமது வாழ்க்கையை வெற்றிகரமாக்கிக் கொண்டால் போதும்.அப்போது நாங்கள் செய்தது மிக நல்லமுடிவே..என்று சொல்வார்கள்.அதுவும் எனக்குத் தெரியும்.அதனால் அம்மா நீங்கள் இதற்கு சம்மதிக்கத்தான் வேண்டும்”

“உனது விருப்பம் போலச் செய்.ஆனால் திருமணத்திற்கு வரச் சொல்லி எங்களைக் கட்டாயப்படுத்தாதே.!” என்று எனது தாயார்,தனது கோப நிலையை தெளிவாக்கிய பின்,“எனது விருப்பம் முக்கியமல்ல,அம்மா வரவில்லை யெனில்,நானும் உனது திருமணத்திற்கு வரமுடியாது” என,என் தந்தையாரும் தெரிவித்துவிட,எனது தம்பிகள் இருவரும் ரகசியமாய் எனக்கு வாழ்த்து தெரிவித்து கைகுலுக்கினார்கள்.தங்கையும்,தங்கையின் கணவரும் எனது தாய்,தந்தை போலவே சொல்லி ஒதுங்கிக் கொண்டனர்.

ஒரு நண்பரின் வீட்டில் பிரேமாவைத் தங்க வைத்தோம்.விரைவில்,நண்பர்களின் உதவியுடன் பதிவுத் திருமணம் செய்து கொண்டு,அன்று மாலையே வரவேற்பு நிகழ்ச்சியையும் நடத்தி விடத் திட்டமிட்டோம்.பதிவுத் திருமணத்திற்கான நல்ல நாளைத் தேடுவதில் முனைப்புடன் ஈடுபட்டோம்.ஆகா..மகா விசேஷமான, அருமையான நாள் கிட்டியது.மகாகவி பாரதியார் பிறந்தநாள்.டிசம்பர்.11. அந்த நாளையே எங்களுக்கான திருமண நாளாய் தேர்ந்தெடுத்தோம்.வேலைகள் துரிதமாக நடந்து கொண்டிருந்தபோதுதான்,முற்றிலும் நான் எதிர்பார்த்திராத இடத்திலிருந்து ஒரு அஞ்சலட்டை வந்தது.எனக்கு அதைக் கண்டவுடன்,அதிர்ச்சியாகவும் இருந்தது.
அடுத்த இரண்டுநாளில் எங்கள் திருமண வரவேற்பு என நிச்சயித்திருந்த நிலையில் இப்படியொரு கடிதமா.?

ஆதலினால் காதலித்தேன்..! அடுத்த தொடருடன் முடிக்கிறேன்.

-இது வரை இதனை விரும்பியோ விரும்பாமலோ வாசித்த அனைவருக்கும் மிக்க நன்றிகள்,--அன்புடன் பொள்ளாச்சி அபி.!

எழுதியவர் : பொள்ளாச்சி அபி -B +ve (19-Oct-12, 8:11 pm)
பார்வை : 288

மேலே