மூட்டை சுமக்கும் பிஞ்சு முதுகுகள்.

மூன்று வயதில்
முதுகில் புத்தக மூட்டை
முளை விடாத
மூளைக்கு அறிவுச் சாட்டை

விளையாட்டுப் பருவத்தில்
வில்லங்கம் பள்ளிச் சிறை
வீட்டிற்கு வந்ததும்
வீட்டுப் பாடச் சுமை

துள்ளும் துளிர்களே
தூண்டில் இரை
தூங்கி விழுமே
வகுப்பறை

அட்டவணை வாழ்க்கைக்குள்
அடங்கிப் போகும் பிஞ்சுகள்
அன்னையின் அரவணைப்பை
அரும்பில் தொலைக்கும் குஞ்சுகள்

வாகனப் பயணத்தில்
வர்த்தகப் பொதி
வீடு வந்து சேர்ந்தால் தான்
உயிர் பெரும் நிம்மதி

மழலை பருவத்திலேயே
மருத்துவராக்கும் கனவுகள்
இளந்தை இளவல் மீது
இஞ்சினியராக்கும் நினைவுகள்

கனவுகள் காண்பது தப்பில்லை
பெற்றோர்களே-அதை
காலம் முந்திக் காண்பதை
மனம் ஒப்பவில்லை.

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (24-Oct-12, 8:48 am)
பார்வை : 179

மேலே