ஓரிரவு வசியக்காரி,,,
ஓரிரவு வசியக்காரி
வாசற் கதவை ஏன் உடைக்கிறாய்
வருகிறேன் நில்யாசகம் கேட்கும்
தாசியின் கோயில்தான் இது
உன் வாசகம் என்ன சொல்
வழிப்போக்கன்
வந்தவர் போனவர் வழியதில்
விற்பனை கவர்ந்திடும் அழகு பொம்மையே
நின்நிழல் உறங்கிய என்னுயிர் ஒன்றினை
நன்னிடை நாடியேயாம் வந்துள்ளோம்
கூரிய நட்பதை சொந்தம்
கொள்ளும் நட்பது தான் இங்கே
அங்கு கொண்டவள் கொண்டிடும்
அவலை கண்ணீர் உரைப்பதுதான் இங்கே
நிலவும் உன்னால் களங்கம் பெறவே
பேரிளம் பெண்ணென பெருமிதம்
கொண்டிடும் பேய்ப்பெண் தாசியே
உன் மைய்யிழை கொஞ்சிட
மஞ்சம் தழுவிட இத்தனை யாசகம்
உன்னிடம் கொண்டிடும் ஆண்களில்
இவனொரு விதிவிலக்கே
அவிழ்த்துவிடு அவனின் உன்மேல் உள்ள
மோக முடிச்சுக்களை இல்லையேல்
முடிந்து விடு பத்தினி பெண்ணவள் சாபம்
கொண்டுன் ஆயுளை முற்றிலுமாய்
தாசிப்பெண்
வரங்களும் சாபங்களும்
ஒரு சேர பெற்றிருக்கும் பாவ
பட்சிகள் யாம்,,இதில் உம்
சாபம் எமை எரிக்க இனி
எத்தனை ஜென்மமோ எம்மில்
வருகின்ற புறத்தார்க்கு
இது புதியதோர் மாமியார் வீடு
உறக்கமிழந்து திறந்து
கிடக்கும் சொர்கவாசல்
வீதியெங்கும் தெருவிளக்கு
விழாகோலமாய் விருந்தோம்பல்
அணைந்து கொடுத்தால்
ஆராவாரம் அடம்பிடித்தல்
அடிகளும் உதைகளும்
இரத்தம் சிந்தி இரசிக்கவைக்கும்
ருசி பலகாரங்கள் இருக்கும்
இது ஒரு இருபத்தி நான்கு
மணி நேர பலகாரச்சந்தை
சதை பலகாரச்சந்தை
யாரென்றே தெரியாத
இருட்டின் சங்கமத்தில்
கரம்கொண்டு அணைக்கும்
ஆண்மை கலவரம்
ஒரு ஜான் வாயிற்று பசிக்கு
ஓரிரவு வேலைக்காரி அவன் மடியில்
இது போல் எத்தனை
கட்டியணைப்புகள்
சாக்கடையில் கசக்கி
எறியப்பட்ட வாசமிழந்த
பூக்களாய் எங்களின்
அர்த்தமற்ற அவதாரம்
இது இம்மண்ணில்
சாயும் அந்திநேரம்
காக்கைக்கும் குருவிக்கும்
இரையாகும் எங்களின்
உயிரற்ற இச்சதை பிண்டம்
சபித்து விட்டு போ
யாம் வாழ்த்துகிறோம்
பத்தினியவளை
இந்த ஒருவனிடமிருந்தாவது
யாம் காப்பாற்றப்பட்டதை எண்ணி
மனம் நிறம்பி வாழ்த்துகிறோம்
அனுசரன்