ஒரு தேவதை பட்டாசு வாங்குகிறாள்

இமைச்சிறகுகளை
மத்தாப்புகளாய்
சிமிட்டிக்கொண்டு
ஒரு தேவதை
புள்ளிமானாய்
துள்ளிக்குதித்து
ஓடி வருகிறாள் பட்டாசுகள் வாங்க...!

வாலிப இதயங்களில்
பறந்தும்
பூமியில் நடந்தும்
அவள் வருகையில்
ஆயிரம் பட்டாசுகளின்
வான வேடிக்கையில்
துள்ளிக்குதித்து
விளையாடுது வாலிப மனசுகள் ...!

கூந்தலில்
தூரி கட்டி விளையாடும்
மல்லிகை மொட்டுக்களும்
தேவதையின்
முக அழகை ரசிக்க
மதில்மேல் பூனையாய்
காத்துக்கிடக்கிறது
அவள் பளிங்கு தோள்களில் ...!

தேவதையே
உன் தோள்களிலிருந்து
நீ முன்
தூக்கிப்போடும்
கூந்தலோடு
மல்லிகை மொட்டுகளையும்
சேர்த்துக்கொள்
அவைகளாவது
அருகிலிருந்து
ரசித்து மகிழட்டும்
அந்த தேவதையின் நிலவு முகத்தை...!

வந்ததும் தெரியாமல்
போனதும் தெரியாமல்
தொலைந்து போன
எத்தனையோ தீபாவளிகளில்
நீ
தேவதையாய்
வந்ததுதானே
பட்டாசு கடைக்காரனின்
உண்மையான தீபாவளி ....!

தேவதையே
சங்கு சக்கரம் வாங்கிச்செல்
ஒரு நிலவை சுற்றி
இன்னொரு நிலவு சுத்தட்டும்....!

மொட்டை மாடியில்
மத்தாப்புகளை சுழற்று
நிலவு காதலி
பூமிக்கு வந்துவிட்டதாய்
நட்சத்திரங்கள் இறங்கி வரட்டும்.....!


புத்தாடைகள் உடுத்தி
தேவதையாய்
நீ
நடந்து வரும்
பேரழகை ரசிப்பது தானே தீபாவளி.....!

தயவு செய்து
மாதம் ஒரு
நரகாசுரனை
மரணமடையச்செய்யுங்கள்
அடிக்கடி வரட்டும்
தேவதைகள் பட்டாசுகள் வாங்க .....!

*********************************************************************

எழுதியவர் : வெற்றிநாயகன் (7-Nov-12, 6:31 am)
பார்வை : 358

மேலே