சரித்திரம் செய்
இளைஞனே........
இன்னும் என்ன
உறக்கம்?
எதற்காக இந்த
தயக்கம்?
பிறப்பும்
இறப்பும்
சாமானியனுக்கு - நீ
சாதனையாளனல்லவா?
சாமானியன் எனில்
இந்த வரிகளோடு
சங்கெடுத்து ஊதிவிட்டு
சவமாகி விடு.
இங்கு சவங்கள்
சாதிப்பதில்லை.
சாதிப்பவன்
சவமாவதில்லை.
சாதனையாளன் எனில்
என்னோடு வா.
ஏறி வரும் பாதைக்கு
ஏழெட்டு படிதுறை கட்டுவோம்.
உன்னை அறி.
அறிதலில் தொடங்கி
உற்சாகத்தின்
உன்னதத்தில் முடி.
சும்மா என்ற
சொல்லை
சுகமாக்காமல்
சும்மாவாகவே ஆக்கி விடு.
எதிர்மறை சிந்தித்தலில்
நேர்மறை சிந்தனைகளை
தொலைத்து விடாது - உன்
சிறகுகளை அகல விறி.
எதையாவது
செய்வதை விடுத்து
எதைச் செய்வது
என திட்டமிடு.
இலக்கின்றி ஓடாதே.
ஓட்டப்பந்தயத்தின்
வெற்றி ,தோல்வி - அதன்
இலக்கில் என்பதை மறவாதே.
முட்டுக்கட்டைகளை
முறித்து எறிந்து
முன்னேறிச் செல்ல
கனவு பாலம் கட்டு.
கனவுகளை
காட்சிகளாக்கி
காட்சிகளை
நனவாக்கு - நம்பிக்கையோடு!
சந்தர்ப்பங்களுக்காக
காத்திருப்பதை விடுத்து
சகலத்தையும்
சந்தர்ப்பங்களாக்கு.
வாய்ப்புகளுக்காக
வாய் திறக்காமல்
வாய்ப்புகளை எல்லாம்
திறந்த வாயிலாக்கு.
தோல்விகளைக் கண்டு
துவளாமல் - அதன்
வலிகளை
தோள் வரை வை.
தோளில் இருக்கும் வரை
அனுபவம் - அதையே
தலைக்கு ஏற்றினால்
பாரம்.
பாரம் சுமக்கும்
கழுதையாய் இருப்பதை விட
அனுபவம் சேர்க்கும்
அறிவாளியாய் இரு.
அனுபவ அறிவில்
எரிமலையாகு - அதில்
உன் சாதனை சங்கை
நித்தம் முழங்கு.
விழுந்ததற்காக
அழாதே.
எழுவதற்காக
விழப்பழகு.
வெற்றியின் தாகத்தோடு இரு.
தாகத்தோடு வேகமாய்
வேகத்தோடு
விவேகமாய் இரு.
ஆரியக்கூத்தாடும்
கலைக் கூத்தாடியாய்
காரியம் செய்யும்
ரெளத்ரம் பழகு.
நடக்குமோ
நடக்காதோ - என்ற
பயத்தை ஒழித்து
பலத்தை உயர்த்து.
மூளை பலத்தை வாளாக்கி
மன பலத்தை கேடயமாக்கி
வாழ்க்கை களத்தில்
யானை பலத்தோடு நில்.
பொழுது போக்கு கழுகுகளுக்கு
நேர மாமிசங்களை போடாமல்
காலத்தே நின்று
காரியம் செய்.
சாதித்தவர்களின்
சரித்திரம் படித்து
உனக்கென
தனியே செய்
“ஒரு சரித்திரம்”