தேடல்கள்
தொலை தூரத்து பாலையில்
மாடுகள் பூட்டிய சகடம்
புழுதிகிளப்பி மணல் மேடுகளுக்கு
மந்திரம் சொல்லிக் கொடுக்கும்
விசுவாசித்த தாவரங்கள்
இலைகள் அசைக்காமல்
எதை பறிகொடுத்துவிட்டு
இப்படி சலனமின்றி ஒரு விரதம்…..
நாளைய ஜீவன் முடிப்புக்கு
இன்று ஒத்திகை பார்க்கப்பட்டது
தூக்கு அதிகாரி
தூக்கில் தொங்கினார்
உண்ணும்போது விழும் பருக்கைகள்
ஒரு கூட்ட எறும்புகளுக்கு
ஒரு மாத சாப்பாடு
காலையில் காளையன்
மாலையில் மாலையன்
காலையும் மாலையும் இல்லாதவன்
அவனுக்கேது காலை மாலை
அவனுக்கெதற்க்கு காசு மாலை
கலங்கரை விளக்கங்கள்
கப்பலைப் பார்ப்பதில்லை
நீரதிகம் அருந்தியதால்
நீ உப்பைத் தின்பதில்லை
வித்துவான் கை பட்டு
வீணை இசை தருவதில்லை
இரண்டுக்கும் நடுவில்
இருப்பதை தேடு
இல்லையென்று நீ சொன்னால்
உன்கைபட்டு ஏனிசை வரவில்லை
திருப்பங்களில் துவக்கம் தெரிகிறது
மரணங்களில் ஜனனம் வாழ்கிறது
கண்ணுக்கு எதிரில் வெற்றிடம்
ஒரு கோடி சலனங்கள்
உன் கண்ணுக்கு வரவில்லை
ஒன்றுக்கும் இரண்டுக்கும்
இடையில் ஒன்றைத் தேடு
அந்த ஒன்றை கண்டுகொண்டால்
உன்னை வெல்ல ஆளில்லை