காத்திருக்கும் விடியல்...!

எட்டிப்பார்க்கும் சூரியனை கண்டு
கீழ் வானம் சிவந்திருக்க
கொண்டை சேவல் ஒன்று
துயில் கலைந்து கொக்கரித்த
இளம் குளிர் போர்வைக்குள்ளே
கனா ஒன்று கண்டேனடா...!

தெருவெங்கும் மாவிலை தோரணங்கள்
நீண்டு வர, தென்னை மரங்கள் தாளத்தோடு வரவேற்க
பெண்பார்க்க நீயும் வந்தநாள் அந்நாளடா...!

சீர்வரிசை தட்டுகள் இடைநிற்க
பெண்டுகள் உன்னை வழிகாட்ட
கதவிடுக்கின் ஓரம் நின்று இரகசியமாய்
உன்னை நானும் முழுதாய் ரசிக்கிறேனே...!

ஆவல் மின்னும் கண்களோ
உன்னை அள்ளி அள்ளி பருகிய பின்னும்
மேலும் மேலும் தாகம் திணித்து மருகியே நின்றதடா...!

மன்மதனின் பார்வையொன்றை இரகசியமாய்
என்னிடத்தில் நீ வீசி, உயிர் வதைத்த நொடி
உன்னை என்னில் கொண்டேனடா...!

வார்த்தைகளின்றி நானும் தடுமாற
நீயோ கண்கள் வழி கவி பேசி
குறுநகை ஒன்றில் என்னை வீழ்த்திவிட்டு
வேடிக்கையாய் நகைக்கிறாய்...!

அடுத்த மாதம் ஆடியாமே?
ஆவணியில் தேதி வைக்க
அவசரமாய் தாக்கல் ஒன்றை
இப்பொழுதே சொல்லி விடு...!

முந்தி வரும் கார்த்திகையோ
பிந்தி வரும் தை மாதமோ
மணநாளை நீட்டிவைத்து
உன்னோடு என் வாழ்நாளை தேய்ந்து போக வைக்காதே...!

உனக்கென்ன? வருகிறேன் என
முற்றத்து மையத்தில் நின்று
சைகை மொழி செய்தியொன்றை
நவிச்சியமாய் நவின்று விட்டு
ஊர்வலத்தில் தேராக
அசைந்தே சென்று மறைந்து விட்டாய்...!

நானல்லவோ வாசல் வழி
உன் பிம்பம் காண்பேனென
நிதம் நிதம் விழி நோக
பார்த்துக்கொண்டே தேய்கிறேன்...!

முறை சோறு ஆக்கிப்போட முறைமாமன் வந்து நின்றான்
சுற்றத்தார் விருந்தோம்பலில்
உண்டு களித்த மயக்கத்திலும்
துரும்பாய் நான் போனேனடா...!

கரம் பற்றி என்னை நீ கரைசேர்க்கும் நாளுக்காய்
நாணம் ஒன்றே நகையாய் பூட்டி
நாயகி நானும் கனகாலம் காத்திருக்கிறேன்...!

ஆடி முடிந்து ஆவணியும் தவறாமல்
வந்து கொண்டே தானிருக்கிறது...!
என்றோ நீ வருவாய்...! கனவில்லை நிஜம் தருவாய்...!

எழுதியவர் : ஜி.டி (9-Nov-12, 8:49 am)
பார்வை : 7357

மேலே