வாழ விட்ட தெய்வம்

'செந்தமிழா' என்றகுரல், அண்டையிலே நின்றவள்யார்
சந்தணமோ செந்தணலின் தோற்றம்
சுந்தரமண் மேனியெழில் ’”சுற்றும்புவி யென்பவள் நான்
சொல்லுகவி சந்தமுடன்” என்றாள்
தந்தன வென்றாடி அதோ எந்தனுயிர் சூரியன்முன்
தாவி நிதம் நாட்டியமும் செய்வேன்
சந்தமுடன் நீகவிதை தந்திடுவாய் என்னிலிவள்
சிந்தைகவர் அங்கநயம் செய்வேன்

வந்தனம்பார் பேருலகே வாழஇடம் தந்தவளே
வாட்டமுறும் மல்லிகை போலானேன்
இந்தநிலை கொண்டவனை இன்தமிழும் சொல்வதெனில்
என்னசெய்வேன் ஏழையென நின்றேன்
உந்தன் விதிஅவ்வளவே இங்குனது பங்கிலையேல்
வந்தவழி சென்றுவிடு என்றாள்
எந்தவழி யென்றலறி அந்தரவான் நோக்கிடநான்
எங்கிருந்தோ செந்தழல்தீ கண்டேன்

வெந்துசுடும் வெம்மையின்றி அன்பொடுதீ ஒன்றெழுந்து
விண்ணிருந்து வேகமுடன்வந்து
செந்தமிழின் சேவகனே சிந்தையதில் எண்ணமென்ன
சொல்லுகவி இக்கணமே என்றாள்
விந்தையிது அன்னையெனும் விண்ணொளியே என்னுயிர்நீ
வேடிக்கையோ சொல்லிவிடு என்றேன்
முந்தி எழும்கற்பனயோ முத்தமிழைக் கையளவே
மோகமுறக் கற்றவன்காண் என்றேன்

தந்தனனே தானதென்ன தந்தனதா தானவைகள்
தந்தனதா சந்தமெழத்தானும்
தந்தனதை தானிதெனத் தானறியா தானதெனில்
தன்னதனை தானழித்ததாகும்
தந்தனன தானதன தந்தனனா தானெழவே
தந்துனதாய் தான்மகிழ நாளும்
தந்தனையேல் தானுனது சந்தமதால் தாய்மனது
தண்மைபெறத் தானுயிரும் வாழும்

தந்திரமோ தந்தனளோ தாகமெளக் கண்டனனோர்
தங்க ஒளி மின்னல் கண்டு நின்றேன்
பந்தெனவே சூழுலகில் பாடுமொலி ஒன்றெழுந்து
பரவியதாய் செவிமடுக்கக் கண்டேன்
நந்தவனம் ஒன்றதிலே நல்லெழிற்பூ பூத்தனகாண்
நதியெழவும் குளிர் நிலவும் தோன்றி
வந்தஒலி சங்கதியை வார்த்தெனையே ஓங்குகவி
சிந்தனைகள் ஊட்டிவிடக்கண்டேன்

சுந்தரமென் கீதமெழ இன்னிசைகள் தாளமிட
எங்குமெழில் பூத்தவிதம் கண்டேன்
சந்தமெழப் பாடிடஎன் சிந்தைகளிகூடிட நான்
செந்தமிழில் ஆற்றல் கொண்டுநின்றேன்
பந்தமெழக் காணுமிவன் பைந்தமிழின் போதைகொளப்
பாடுகிறேன் விந்தையெழ இன்று
சந்தனமும் வாசம் அது கொண்டதென மேலும்பல
செந்தமிழில் நன்கவிதை செய்வேன்

விந்தைவெளி யெங்குமொளி வேகமெடுத் தோடுகிறேன்
விண்ணிடைநான் வீறுடனே ஏகி
சந்திரனில் குளிரெடுத்து வெண்முகிலின் இதமெடுத்து
சிந்தைமகிழ் வாகிடவானெங்கும்
தொங்குமொளித் தாரகைகள் தொட்டெடுத்து பூக்களெனத்
தூவி எழிற்பா படித்து நின்றேன்
வந்தவளைக் காணவில்லைக் கண்டொருநாள் காதிலிவன்
வாழ்வளித்த தாய் புகழைச் சொல்வேன்



குறிப்பு விளக்கம்

( தந்தனனே தானதென்ன தந்தனதா தானவைகள்
தந்தனதா சந்தமெழத்தானும்
தந்தனதை தானிதெனத் தானறியா தானதெனில்
தன்னதனை தானழித்ததாகும்

இதற்குப் பொருள்:--
கவிஎழுதும் ஆற்றலை தந்தேனல்லவா அதற்கு ஆனதென்ன? அந்த நான் அளித்த ஆற்றலை வெளிபடுத்தி சந்தமெழக் கவிதையாக்கு. அல்லாமல் நான் தந்த ஆற்றலை இதுதானென நீயறியாமல் போவாயாயின் உன் திறமையை நீயே அழித்ததாகும் என்ற பொருள் வரும் .

எழுதியவர் : கிரிகாசன் (18-Nov-12, 5:58 pm)
சேர்த்தது : கிரிகாசன்
பார்வை : 149

மேலே