குபேர கிரிவலம்
குபேர கிரிவலம் பற்றி ஒரு நல்ல கட்டுரை (உங்களின் நலன்களுக்காக )
ஆமா இவரு பெரிய குபேரன் வீட்டு கொடுக்கு , சாப்பிடுடா - இது கொஞ்சம் வசதி இல்லாத வீட்டில் , பிள்ளைகள் சாப்பிட முகம் சுளிக்கும்போது - கிடைக்கின்ற அர்ச்சனை. குபேரன் செல்வத்துக்கு அதிபதியாக நமது இந்து மதம் கூறுகிறது.
தேவ லோகத்தில் இவர்தான் கஜானாவுக்கு இன்சார்ஜ். இவருக்கு முறைப்படி பூஜை செய்து வழிபட , அவர் நமக்கு செல்வத்தை அள்ளித் தருவார் என்பது நம்பிக்கை. நம்ம நாட்டில, தங்க கடை வைச்சு இருக்கிற எல்லா சேட்டுக்களும் தவறாமல் - குபேர பூஜை செய்பவர்கள்.
அப்படிப் பட்ட குபேரன் , வடக்கு திசைக்கு அதிபதியாக இருக்கிறார். அவர் இந்த நிலையை அடைய - அண்ணாமலையில் சிவலிங்கத்தை நிறுவி , சிவனை நினைத்து தவம் செய்து இருக்கிறார். அப்படி அவர் நிறுவிய லிங்கம் தான், குபேர லிங்கம்.
இந்த குபேர லிங்கத்தை - குபேர பகவான் - சில குறிப்பிட்ட தினங்களில் வழிபாடு செய்து , சிவன் அருளைப் பெறுவதாக நம்பப்படுகிறது. அப்படி அவர் , வெகு நிச்சயமாக பூஜை செய்யும் நாள் பற்றி , இப்போது பார்க்க விருக்கிறோம்.
நமக்கும் குபேர சம்பத்து வேண்டும் அல்லவா? அப்படி சூட்சுமமாக குபேரன் பூஜை செய்யும் வேளையில் - நாமும் அங்கு இருந்தால், அவர் பார்வை நம் மீதும் விழக்கூடும்.. குபேரன் பூஜை செய்வதால் - அந்த அண்ணாமலையாரும் அந்த வேளையில் அங்கு ஆனந்தமாக வீற்று இருக்கக் கூடும்...
நமது பழைய வாசகர்கள் அனைவருக்கும் தெரிந்து இருக்கக்கூடிய விஷயம் இந்த குபேர கிரிவலம். நமது புது வாசகர்களும் தெரிந்து கொள்வதற்காக இந்த பதிவு.
நேரமோ , என்னவோ - நல்லவிதமா வாழ்க்கையில, பண வசதியோட ஓஹோன்னு இருக்கவேண்டிய ஆளு சார் நானு.. நான் பார்த்த வேலை அப்படி, கை நிறைய சம்பளம், ஆனால் இப்போ பாருங்க , சம்பளம் எல்லாம் வருது. கையில தான் எதுவும் நிக்க மாட்டேங்குது. நல்லா போயிக்கிட்டு இருந்துச்சு. இடையில ஒரே ஒரு விஷயம் சொதப்புச்சு , இப்போ.... தலைக்கு மேல கடன், வட்டி... இதெல்லாம் விட கொடுமை, இது எப்போ முடியும்னு கூட தெரிய மாட்டேங்குது. நம்பிக்கையே விட்டுப் போச்சு சார். ஏதாவது ஒரு அதிசயம் நடந்துடாதான்னு நானும் பார்த்துக்கிட்டு இருக்கேன் சார். கொஞ்சம் கட்டத்தைப் பார்த்து சொல்லுங்கன்னு , நம்ம கிட்ட வர்றவங்கள்ல பத்துக்கு நாலு பேராவது உண்டு.
ஆறுக்குரியவன் தசை , ஆறுக்கு உரியவன் சாரம் பெற்றவர் தசை , அஷ்டம , ஏழரை சனி நடப்பவர்களுக்கு - பொருளாதார வீழ்ச்சி பெரும்பாலும் நடந்து விடுகிறது .
நம்மிடம் வரும் அன்பர்களில் , நிஜமாகவே நொந்து நூலானவர்களுக்கு மட்டும் - இந்த குபேர கிரிவலம் பற்றி தெரிவிப்பது உண்டு. குபேர கிரிவலம் ஒரு ரகசியமாக வைத்து இருக்க வேண்டிய விஷயமாதலால் - மேலும் விவரங்களுக்கு நமது சென்ற வருட பதிவை Refer செய்து கொள்ளவும்.
உங்களுக்கு வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக , ஒரு சுமுகமான நிலை வர வேண்டும் என்று விரும்பினால் , நீங்களும் இந்த தினத்தைப் பயன் படுத்திக் கொள்ளுங்கள்.
உங்கள் ஜாதக அமைப்புப் படி - கிடைக்கும் பலன்கள் , முன்னே பின்னே தாமதப் பட்டாலும், நீங்கள் இப்போது இருக்கும் நிலையை விட - ஒரு படி நிச்சயம் முன்னேறுவீர்கள்.
இந்த வருடம் குபேர கிரிவலம் 11 .12 .2012 புதன்கிழமை வருகிறது.அன்று மாலை சரியாக 4 மணி இலிருந்து மாலை 6 மணி வரை குபேரலிங்கத்திடம் , உங்கள் நியாயமான கோரிக்கையை வையுங்கள். பூஜை முடிந்த பிறகு - அங்கிருந்து நீங்கள் கிரிவலம் தொடங்கி , முடிக்க வேண்டும். புதன் கிழமையாக இருப்பதால் மாலை 4 மணி முதல் 5 மணி வரை குரு ஹோரையும் சேர்ந்து வருகிறது.
கிரிவலம் செல்லும்போது எவரிடமும் பேசாமல்,மனதுக்குள் ஓம்சிவசிவஓம் ஜபித்தவாறு செல்லவும். ஐயா மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் கூறியபடி மஞ்சள் ஆடை , அல்லது வேஷ்டி அல்லது ஒரு கைக்குட்டையாவது வைத்து இருந்தால் , உங்கள் உடலில் இந்த மந்திர ஆகர்ஷணம் தங்கும்.
குபேர லிங்கத்தில் ஆரம்பித்து , ஈசான்ய லிங்கம் வந்து - அண்ணாமலையாரை தரிசித்து விட்டு - ராஜ கோபுரத்தில் கிரிவலம் தொடங்கி , பின் அஷ்ட லிங்கங்களை வரிசையாக தரிசித்து விட்டு - ராஜ கோபுர வாசலில் கிரிவலம் முடிப்பது உசிதம்.
இந்த நாள் என்று இல்லாமல் , எல்லா நாளுமே திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது , மிக மிக நல்ல காரியம். இந்த நாளுக்கு இப்படி ஒரு சக்தி இருப்பது உண்மையோ , பொய்யோ - பௌர்ணமி அல்லாத ஒரு சாதாரண நாளில் , நிம்மதியாக - சுற்றி இருக்கும் கூட்டத்தின் தொந்தரவு இல்லாமல் , மன அமைதியுடன் கிரிவலம் வர முடியும். அஷ்ட லிங்கங்களை கண் குளிர தரிசனம் செய்ய முடியும்.
சாதாரண நாளில் கூட ஒரே ஒரு முறை - குபேர லிங்க வாசலில் ஒருவருக்கு அன்னதானம் செய்தவர்களுக்கு - ஒரு மாதத்துக்குள்ளாகவே - இரண்டு மடங்கு சம்பளத்துடன் புதிய வேலை கிடைத்தும் இருக்கிறது.
எல்லாம், பதி பக்தியுடன் , நம்பிக்கையுடன் - நாம் வேண்டும் முறையில் தான் இருக்கிறது.. அப்படி இருக்கும்போது , இந்த நாளை பயன்படுத்துவது நல்லது என்பது என் அபிப்பிராயம்.......
நான் கடந்த மூன்று வருடங்களாக , இந்த தினத்தை தவற விடுவது இல்லை. முதல் இரண்டு வருடங்களில் இதை அனுபவப் பூர்வமாக உணர்ந்த பிறகு, சென்ற வருடம் என் நண்பர்களுக்கு தெரியப்படுத்தியதில் - பதினோரு பேர் சென்ற வருடம் வந்து இருந்தனர். ஒரு ஆய்வுக்காக அவர்களின் இந்த ஒரு வருட நிலையை ஆராய்ந்ததில் - மூன்று பேர் , நல்ல வேலை கிடைத்து வேறு கம்பெனிக்கு சென்று உள்ளனர். ஐந்து பேருக்கு அவர்கள் கம்பெனியிலேயே - பதவி உயர்வு கிடைத்து இருக்கிறது. மீதி மூன்று பேருக்கு - பெரிய அளவில் ஏற்றம் இல்லையெனினும், ஓரளவுக்கு நிம்மதியுடன் இருக்கின்றனர்.
பதவி உயர்வு அடைந்தவர்களுக்கு - எதேச்சையாக நடந்த ஒரு விஷயமாக நினைத்தாலும், பல வருடங்களாக இழுபறியாக இருந்த விஷயம் அது.
இந்த பதினோரு பேரில் சிலருடன் இந்த வாரத்தில் பேசியபோது - அனைவரும் தவறாமல் வருவதாக கூறி இருக்கிறார்கள்.
உங்களில் யாரேனும் வருவதாக இருந்தால் - அதற்க்கேற்ப இன்றிலிருந்தே தயாராகுங்கள். வாய்ப்பு கிடைப்பது அரிது..! யோகம் உள்ளவர்கள் நிச்சயம் வர முடியும். நம்பிக்கையுடன் வருபவர்களுக்கு , அந்த அண்ணாமலையாரின் அருளும், லட்சுமி கடாட்சமும், குபேர சம்பத்தும் நிச்சயம் உண்டு..!
நேரம் தாராளமாக இருந்தால் , அண்ணாமலை கிரிவலம் முடிந்து திருப்பதி சென்று வருதல் , கூடுதல் விசேஷமாக அமையும்.
மழை நேரமாக இருப்பதால் , அதற்க்கு தகுந்த ஏற்பாடுகளுடன் வருவது நல்லது.
முயற்சி செய்து பாருங்களேன்..!